விவசாயிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் வேளாண் பட்ஜெட் இல்லை - பெ. சண்முகம்

சட்டப்பேரவை தேர்தலின்போது தவெகவால் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிதிநிலை அறிக்கை அக்கறை செலுத்தவில்லை.
விவசாயிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் வேளாண் அறிக்கை இல்லை - பெ. சண்முகம்
Published on

2026-27ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தவெக அரசு நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. அதனைத்தொடர்ந்து இன்று வேளாண்துறை அமைச்சர் வினோத், வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் வேளாண் அறிக்கை விவசாயிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

வரவேற்கத்தக்கது

“வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும், சிறுதானிய உற்பத்தி மற்றும் கொள்முதல் ஊக்கப்படுத்தும் அறிவிப்பு, பனை பாதுகாப்பு இயக்கம், வாழைக்கு முட்டுக் கொடுக்கும் திட்டம், பூச்சி மற்றும் நோய் பாதிப்பிலிருந்து தென்னையை பாதுகாக்க தென்னை டானிக் வழங்குவதுடன் தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பது,

வாழை, மஞ்சள், வெங்காயம், தக்காளி, மா, மிளகாய் ஆகிய விளைபொருட்கள் சேமிப்புக்கான குளிர்ப்பதன கிடங்குகள் அமைக்கப்படும், சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் 1000 விவசாயிகளுக்கு மானியத்துடன் வழங்கப்படும், உழவர் சந்தைகள் மேம்படுத்தப்படும் என்றும், வாரத்திற்கு ஒரு நாள் இயற்கை வேளாண் பொருட்கள் விற்பனைக்கு ஒதுக்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.

பயிர்க்கடன் தள்ளுபடி

நிதிநிலை அறிக்கையில், விவசாயத்தில் இயந்திரமயம் என்பதற்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் விவசாய வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்ற கருத்தின் அடிப்படையில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, விவசாய தொழிலாளர்களுக்கு விவசாயத்தில் வேலை கிடைக்காமல் புலம்பெயர்ந்து செல்லும் அவலநிலை உள்ளது. இந்த நிலையில், விவசாயத்தை முழுமையாக இயந்திரமயமாக்குவது, மனித உழைப்பை முற்றிலும் நிராகரிக்கும் நிலை ஏற்பட்டு விவசாய தொழிலாளர்களுக்கு விவசாயத்தில் வேலையே கிடைக்காது என்ற நிலையை உருவாக்கும் என்பதை அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.

விவசாயத்திற்கு இலவச மின்சாரம் என்பது தமிழ்நாடு விவசாயிகள் போராடிப் பெற்ற உரிமை ஆகும். மின் இணைப்புக் கோரி பல ஆண்டுகளாக சில லட்சம் விவசாயிகள் காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், ஏற்கனவே அரசு அறிவித்துள்ள விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி போதுமானது அல்ல என்று விவசாயிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

தொடர்கதை

விவசாயத்திற்கு முக்கியம் தரமான விதை, உரம், பாசன உத்தரவாதம், சந்தை வாய்ப்பு கொள்முதல் உத்தரவாதம் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைப்பதற்கான குடோன் வசதிகள் இல்லாமல் திறந்தவெளியில் வைக்கப்படுவதும், மழையில் நனைந்து வீணாவதும் தொடர்கதையாக உள்ளது.

ஆனால், இதுகுறித்து நிதிநிலை அறிக்கையில் எதுவுமே குறிப்பிடாமல் இருப்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். மேலும், குறுவை சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அரசு முன்வர வேண்டும்.

காட்டுப்பன்றி மட்டுமல்லாமல் பலவிதமான வன விலங்குகளால் பயிர்கள் பாதிக்கப்படுவது, மனித உயிரிழப்புகள் உட்பட ஏற்படுகிறது. நிதி நிலை அறிக்கையில் காட்டுப்பன்றிகளை தடுப்பதற்கு யோசனை சொல்லப்பட்டுள்ளது. அதேநேரத்தில், வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசு அறிவிக்க வேண்டும்.

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை

சட்டப்பேரவை தேர்தலின்போது தவெகவால் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிதிநிலை அறிக்கை அக்கறை செலுத்தவில்லை. குறிப்பாக, நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 3500ம், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4500ம், சந்தை விலையில் சரிவு ஏற்படும்போது அதை அரசு ஈடுசெய்யும் என்பதும்,

விதைப்பு கால உதவியாக ஒவ்வொரு விவசாய குடும்பத்திற்கும் ரூ. 15,000 வழங்கப்படும் என்பதும், 100 சதவிகிதம் பயிர்க்காப்பீடு உத்தரவாதப்படுத்த தமிழ்நாடு அரசே பயிர்க்காப்பீட்டு நிறுவனத்தை ஏற்படுத்துவது போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை உள்ளாக்கியிருக்கிறது.

பெரும்பகுதியான மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் வேளாண்மை துறைக்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் அளித்திருக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com