தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த ம.தி.மு.க.வுக்கு சட்டசபை தேர்தலில் 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதில் 2 பேர் வெற்றி பெற்றனர்.
தொகுதி உடன்பாட்டின் போது தி.மு.க-ம.தி.மு.க. இடையே சுமூக உறவு ஏற்படவில்லை. அப்போதே ம.தி.மு.க.வில் சலசலப்பு ஏற்பட்டது. அதற்கு பொதுச்செயலாளர் வைகோ முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த நிலையில் தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் த.வெ.க. ஆட்சி அமைந்தது. இதையடுத்து பல்வேறு கட்சிகளில் இருந்து த.வெ.க.வுக்கு படையெடுத்தார்கள். இதற்கிடையில் முதலமைச்சர் விஜய் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் பதவி ஏற்றவுடன் மரியாதை நிமித்தமாக நேரில் சென்று சந்தித்தார். அப்போது வைகோவையும் சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ முதலமைச்சர் விஜய்யை சந்தித்து பேசினார்.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை த.வெ.க.விற்கு ஆதரவளித்து வரும் நிலையில் ம.தி.மு.க.வும் தனது நிலைப்பாட்டை வருகிற 27-ந்தேதி அறிவிப்பதாக வைகோ கூறியுள்ளார்.
இத்தகைய அரசியல் சூழ்நிலையில் நேற்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, அண்ணா நகரில் உள்ள வைகோ வீட்டிற்கு சென்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் விஜய்யை இன்று வைகோவை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பு தலைமை செயலகத்தில் நடக்கிறது.
நாளை சட்டசபை கூடும் சூழ்நிலையில் வைகோ சந்திப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ம.தி.மு.க.வும், த.வெ.க.வை நோக்கி நகர்வதாக தெரிகிறது.
அரசியலில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி திருப்பங்கள் நடைபெற்று வரும் நிலையில் ம.தி.மு.க.வில் தற்போது மாற்றங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.