தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுகவை சேர்ந்த பலர் தவெக வில் இணைந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், அதிமுகவில் நீண்ட காலம் பணியாற்றிய வைகை செல்வன் நேற்று அதிமுகவில் இருந்து விலகி இன்று தவெகவில் இணைந்தார்.
இதனைதொடர்ந்து, செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது, அதிமுக சந்தித்த சமீபத்திய தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டி பேசிய அவர், கட்சி அடுத்தடுத்து பின்னடைவுகளைச் சந்தித்து வருவதை மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்,
மேலும், எம்ஜிஆர் போன்று காலத்தின் கட்டாயம் விஜய், தமிழ்நாட்டின் தகுதியுள்ள தலைவராக விஜய் இருக்கிறார். தமிழ்நாட்டின் தகுதியுள்ள தலைவராக விஜய் உயர்ந்திருப்பதால் அவரை தேடி வந்து இணைந்திருக்கிறோம். அதிமுகவில் இருந்து மனவேதனையுடன் பிரிந்து வந்துள்ளோம்.
விஜய் எங்களிடம் எளிமையாக, அன்பாக, பாசமாக பேசினார். அதிமுகவில் சரியான தலைமை இல்லாத நிலையில் அங்கிருந்து பிரிந்து வந்து தவெகவில் இணைந்திருக்கிறோம், எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆளுமையாக விஜய் உருவெடுத்திருக்கிறார்.
மீண்டும் மீண்டும் தோல்வி அடைந்து கொண்டிருந்தால் இபிஎஸ் மீது எப்படி நம்பிக்கை வைக்க முடியும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை குறித்து வைகைச்செல்வன் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அதிமுகவின் தலைமை மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து கட்சியின் மூத்த நிர்வாகியே இவ்வாறு பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்திலும், குறிப்பாக அதிமுக தொண்டர்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு கட்சியை வழிநடத்தும் விதம் குறித்து எழுந்துள்ள இந்த விமர்சனம், அக்கட்சிக்குள் இருக்கும் உள்விவகார அதிருப்தியை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.