யானைகள் 
தமிழக செய்திகள்

உடுமலை-மூணார் சாலையில் காட்டு யானைகள் முகாம்

வனத்துறையினர் யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.

கடும் வறட்சி

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது நிலவி வரும் கடும் வறட்சி மற்றும் போதிய மழையின்மை காரணமாக, வனப்பகுதிக்குள் கடுமையான தண்ணீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், அடர்ந்த காட்டை விட்டு வெளியேறிய யானைகள், தங்களுக்குத் தேவையான உணவு மற்றும் தண்ணீரைத் தேடி உடுமலை - மூணார் பிரதான சாலைக்கு வரத் தொடங்கியுள்ளன.

யானைக்கூட்டம்

தற்போது குட்டிகளுடன் கூடிய ஒரு பெரிய யானைக்கூட்டம் இந்த மலைச்சாலையிலேயே முகாமிட்டு உலா வருவதால், அந்த வழியே செல்லும் பயணிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர். உடுமலை-மூணார் சாலையில் செல்லும் வாகனங்கள் யானைகளைக் கண்டவுடன் பதற்றமடைந்து தொடர்ச்சியாக ஹார்ன் அடிப்பதைத் தவிர்க்க வேண்டும். சத்தம் யானைகளுக்கு ஆத்திரத்தை மூட்டி, வாகனங்களைத் தாக்க வழிவகுக்கும்

வாகனங்கள்

சாலைகளில் யானைகள் நின்றுகொண்டிருந்தால், தூரத்திலேயே வாகனங்களை நிறுத்திவிட வேண்டும். மிக அருகில் சென்று வாகனங்களை நிறுத்தவோ, என்ஜினை ஆஃப் செய்யவோ கூடாது. யானைகளுக்கு மிக அருகில் சென்று செல்ஃபி எடுப்பது, வீடியோ எடுப்பது போன்ற விபரீத செயல்களில் ஈடுபடக் கூடாது. இது உயிருக்கே ஆபத்தாய் முடியலாம். மேலும் மலைச்சாலையில் போதிய வெளிச்சம் இருக்காது என்பதால், மாலை மற்றும் இரவு நேரங்களில் இந்தச் சாலையில் பயணிப்பதைத் தற்காத்துக் கொள்வது நல்லது

வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

அதேபோல் யானைகள் தங்களின் வாழ்வாதாரத்திற்காகவே சாலைக்கு வருகின்றன. மனிதர்கள் அவற்றுக்கு இடையூறு செய்யாத வரை அவை யாரையும் தாக்குவதில்லை. எனவே, வாகன ஓட்டிகள் பொறுமையுடனும், வனத்துறையினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றியும் தங்களது பயணத்தை மேற்கொள்ள வேண்டும். விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.