இருதரப்பாக பிரிந்து அடித்துக்கொண்டால் தான் கோஷ்டி மோதல், அமுதனை 20 பேர் அடித்துள்ளனர், இது கொலை என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
தமிழ்நாடு சட்டசபை 4 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று தொடங்கியது. அப்போது, கோவை மாணவன் கொலை தொடர்பாக தி.மு.க. கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் ஏற்கப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
* கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளது.
* கோவை கல்லூரி மாணவன் கொலையை ஏற்கனவே அமைச்சர் ராஜ்மோகன் கோஷ்டி மோதலால் கொலை என கூறினார்.
* இருதரப்பாக பிரிந்து அடித்துக்கொண்டால் தான் கோஷ்டி மோதல், அமுதனை 20 பேர் அடித்துள்ளனர், இது கொலை.
* அமுதனின் பெற்றோரிடம் தொலைபேசியில் ஆதரவு கூறினேன்.
* போதைப்பொருள் புழக்கம் பற்றி தகவல் அளித்ததால் தான் அமுதன் கொலை என அவரின் பெற்றோர் திட்டவட்டமாக கூறினர்.
* போதைப்பொருள் கும்பல் குறித்து காவல்துறையிடம் தகவல் கொடுத்ததால் அமுதன் கொலை செய்யப்பட்டுள்ளான்.
* கோவையில் மட்டுமல்ல சென்னை திருவொற்றியூர் பள்ளி மாணவன் தனுஷ் போதை பழக்கத்தை தட்டிக்கேட்டதால் கொலை செய்யப்பட்டுள்ளான்.
* போதை கலாச்சாரத்தை எதிர்த்து நிற்கும் ஒவ்வொருவருக்கும் இது ஒரு எச்சரிக்கை சம்பவமாக இருக்கிறது.
* சென்னை அம்பத்தூரில் ஆட்டோவில் வைத்து பெண் கழுத்தறுத்து கொலை.
* கொலை மட்டுமல்ல பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அதிகரித்துள்ளது.
* 100 நாள் சாதனை என பெருமை பேசும் த.வெ.க. அரசு, 100 நாட்களில் சட்டம் ஒழுங்கு நிலையையும் பார்க்க வேண்டும்.
* காஞ்சிபுரத்திலும் போதைக்கும்பல் இரு இளைஞர்களை வெட்டிக்கொலை செய்துள்ளது.
* பள்ளி, கல்லூரிகளில் வன்முறைக்கு எதிராக ஆலோசனை வகுப்புகளை எடுக்க வேண்டும்.
* ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீதே பாலியல் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கிறது.
* போதைக்கு எதிரான தொடர் விழிப்புணர்வு, வன்முறைக்கு எதிராக கவுன்சிலிங் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.