த.வெ.க. சார்பில் தோழமைக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் வருகிற ஜூலை 1-ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த த.வெ.க., தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், வி.சி.க., ஐ.யூ.எம்.எல். கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்தது. த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார்.
த.வெ.க. ஆட்சி:
தொடக்கத்தில் இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் (ஐயூஎம்எல்), விசிக ஆகிய கட்சிகள் தி.மு.க. கூட்டணியில் தொடர்வதாகவும், குடியரசுத் தலைவர் ஆட்சி அமைவதை தடுக்கவே த.வெ.க. ஆட்சி அமைக்க ஆதரவு அளித்ததாக தெரிவித்தன.
பின்னர், ஐ.யூ.எம்.எல். தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி த.வெ.க. கூட்டணியில் இணைவதாக அக்கட்சியின் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் சமீபத்தில் அறிவித்தார். அதேபோல், ம.தி.மு.க.வும் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியதாக அந்த கட்சியின் பொது செயலர் வைகோ சனிக்கிழமை அறிவித்தார்.
ஆலோசனை கூட்டம்:
இந்த சூழலில், த.வெ.க. சார்பில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டம் சென்னை மீனம்பாக்கத்தில் வருகிற ஜூலை 01-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் த.வெ.க. கூட்டணியில் இணைந்த கட்சிகள் மற்றும் த.வெ.க. ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்த கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதற்காக த.வெ.க. சார்பில் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
நேரில் அழைப்பு:
அதன்படி, நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த், விளையாட்டு மேம்பாட்டு மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சென்னை மீனம்பாக்கத்தில் வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவனை நேரில் சந்தித்து கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தனர்.
தொடர்ந்து, அடுத்தடுத்த கட்சிகளின் தலைவர்களுக்கும் நேரில் சென்று அழைப்பு விடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில், த.வெ.க. கூட்டணி குறித்தும், அதற்கான பெயர் குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.