தமிழக செய்திகள்

த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இந்த மாத இறுதியில் தாக்கல்

பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் விஜய் கடந்த சில நாட்களாக தலைமைச் செயலகத்தில் பல்வேறு அரசுத் துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாட்டில் புதிய ஆட்சியை அமைத்துள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) அரசின் முதல் முழுமையான பட்ஜெட் இந்த ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் வந்ததால் 2026-27-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் முந்தைய தி.மு.க. அரசால் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது.

முதல் பட்ஜெட்

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு இந்த ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது.

இது தொடர்பாக பல்வேறு துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். முழுமையான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்து உள்ளன.

தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.ஏ.சித்திக் கூறும் போது, ‘இந்த மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம். இது ஒரு முழுமையான மற்றும் விரிவான பட்ஜெட்டாக இருக்கும்’ என்றார்.

மாநிலத்தின் நிதி மேலாண்மை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதை தொடர்ந்து புதிய அரசின் முதல் விரிவான பட்ஜெட்டாக இருப்பதால் இந்த பட்ஜெட்டில் அரசின் பல்வேறு அறிவிப்புகள், சலுகைகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாதம் 28-ந்தேதி அல்லது கடைசி வாரத்தில் ஏதாவது ஒரு நாளில் பட்ஜெட் தாக்கலாகும் என்று கூறப்படுகிறது.

முதலமைச்சர் ஆலோசனை

முன்னதாக, பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் விஜய் கடந்த சில நாட்களாக தலைமைச் செயலகத்தில் பல்வேறு அரசுத் துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.