காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுமானப் பணிகளை சட்டவிரோதமாக மேற்கொள்ளும் கர்நாடக அரசு மீது தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று ம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான அளவீட்டுப் பணிகளைத் தொடங்கியிருப்பதோடு, அப்பகுதிகளில் சட்டவிரோத கட்டுமானப் பணிகளையும் கர்நாடக அரசு மேற்கொண்டிருப்பதாக அங்கு நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கும் எதிராகச் செயல்படுவதோடு, தமிழகத்திற்கு தரவேண்டிய உரிய நீரை உரிய நேரத்தில் தர தொடர்ந்து மறுத்து வரும் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கம், தற்போது மேற்கொண்டிருக்கும் இந்த கட்டுமானப் பணிகளின் மூலம் மேகதாது அணையைக் கட்டும் முடிவிலிருந்து துளியளவும் பின்வாங்கப் போவதில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
மேகதாது அணை கட்டுவதற்கான எந்தவொரு அனுமதியையும் கர்நாடக அரசுக்கு வழங்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலை என்னவென்று தெரியாத நிலையில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் காட்டும் தீவிரம் தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேகதாதுவில் ஒரு செங்கல்லைக் கூட வைக்க விடமாட்டோம் என தமிழக காங்கிரஸ் கட்சியினர் இங்கு வெற்று வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில், மேகதாது பகுதிகளில் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கம் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருப்பதன் மூலம் காவிரி விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியை நம்பி எந்தவித பயனும் இல்லை என்பதை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் இனியாவது உணர வேண்டும்.
எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக காவிரியில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருக்கும் கர்நாடக அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதோடு, பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்திட வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.