தஞ்சாவூர்:
தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு இன்று தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க- கூட்டணி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை தாங்கி பேசியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்து வருகிறது. கஞ்சா, போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதால் இளைஞர்கள், மாணவர்களை போதைக்கு அடிமையாகி சமூக விரோத செயலில் ஈடுபடும் நிலைக்கு தி.மு.க. அரசு தள்ளி உள்ளது. பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்கள் தங்களது குழந்தைகளை வீட்டில் இருந்து வெளியே அனுப்பவே பயப்படுகின்றனர்.
தமிழகத்தில் முதலமைச்சரின் குடும்பத்தை தவிர வேறு யாருக்கும் பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு ரூ.5 ஆயிரம் மகளிர் உரிமைத்தொகை மற்றும் கோடைக்கால சிறப்பு தொகை வழங்கி ஓட்டு போட வைத்து விடலாம் என தி.மு.க. அரசு தப்பு கணக்கு போட்டுள்ளது. ஆனால், பெண்கள் ஏமாற தயாராக இல்லை. வருகின்ற தேர்தலில் தி.மு.க ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி. அதனை பெண்களே செய்து விடுவார்கள். மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தி.மு.க. ஆட்சியை தோற்கடிப்பார்கள்.
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக ஆட்சிக்கட்டிலில் அமர்வார். நான் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தேன். மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் என்பதற்காக மன வருத்தங்களை எல்லாம் விட்டு விட்டு கூட்டணியில் இணைந்துள்ளேன். தற்போது எந்தவிதமான மன கசப்பும் இல்லை. அனைத்தும் சரியாகிவிட்டது.
தி.மு.க.விற்கு எதிராக எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை தொடங்கினார். ஜெயலலிதா அதனை கட்டிக்காத்தார். தற்போது எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக திறம்பட பணியாற்றி வருகிறார். ஆனால், அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ., அமைச்சர், ஏன் முதலமைச்சர் பதவியை கூட அனுபவித்து பலன் அடைந்து தற்போது அங்கிருந்து விலகி எதிரி கட்சியான தி.மு.க.வில் இணைந்து சிலர் நம்பிக்கை துரோகம் செய்துள்ளனர். அவர்களுக்கு ஒருபோதும் மன்னிப்பு கிடையாது. தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.