சென்னை குன்றத்தூரில் வசிப்பவர் கிரிதரன். இவர் தனது மனைவி பவித்ரா மற்றும் விஷாலினி (6 வயது), சாய் சுதர்சன் (4 வயது) ஆகிய 2 குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.
அவர்களது வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்ததால் எலி மருந்து, எலி பேஸ்ட் ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிற்குள் வைக்கப்பட்ட எலி மருந்தின் நெடி, வீடு முழுவதும் பரவியுள்ளது. இதனை சுவாசித்த நால்வருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதில், 2 குழந்தைகள் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர்.
குழந்தையின் பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக எலியை கட்டுப்படுத்த மருந்து வைத்த Pest Control நிறுவனம் மீது வழக்கு பதிந்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள கிரிதரன், பவித்ரா இருவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இருப்பினும் அவர்கள் இருவரும் மேலும் இரண்டு நாட்களுக்கு ஐசியுவில் கண்காணிக்கப்பட வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.