தமிழக செய்திகள்

மெரினா லூப் சாலையில் போக்குவரத்து நெரிசல்: தடுப்புகள் அமைப்பதால் வாகன ஓட்டிகள் அவதி

கலங்கரை விளக்கம் அருகே போலீசார் தடுப்பு அமைத்து திருப்பி விடுவதால் மாணவ-மாணவிகள் டுமிங்குப்பம் வழியாக சுற்றி செல்ல வேண்டி உள்ளது.

சென்னை மெரினா கடற்கரையை நீலக்கொடி கடற்கரையாக மாநகராட்சி அறிவித்த பிறகு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் மெரினா கடற்கரை புதுப்பொலிவு பெற்று வருகிறது.

மெரினாவில் கடை போடும் சிறு வியாபாரிகள் பலர் லூப் சாலைக்கு இப்போது இடம் பெயர்ந்து வருகின்றனர். இதனால் அங்கு கடும் இடநெருக்கடியை எதிர்கொள்கின்றனர். சிலர் மட்டுமே நவீன அங்காடியை பயன்படுத்துகின்றனர்.

மாநகராட்சியால் கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு வியாபாரிகளிடையே பெரும் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் பல வியாபாரிகள் சாலையோரத்தையே வியாபாரத்துக்கு தேர்ந்தெடுக்கின்றனர்.

சாலையோரம் ஆயரக்கணக்கான மீனவ குடும்பங்கள் வசிப்பதால் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள பள்ளிகளுக்கு செல்வது அங்குள்ளவர்களுக்கு போக்குவரத்து நெரிசலில் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

கலங்கரை விளக்கம் அருகே போலீசார் தடுப்பு அமைத்து திருப்பி விடுவதால் மாணவ-மாணவிகள் டுமிங்குப்பம் வழியாக சுற்றி செல்ல வேண்டி உள்ளது. இதனால் நேரம் விரயமாவதாக அங்குள்ள மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வழியாக நீதிபதிகள், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், காலை-மாலை நேரங்களில் செல்வதால் போலீசார் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாவதாகவும், சாந்தோம் சாலையில் தடையற்ற பயணத்திற்கு ஒரு நீண்ட காலத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து உள்ளனர்.