தமிழக செய்திகள்

11 மாதத்திற்கு பிறகு அதிரடி சரிவு - தங்கம் விலை சவரன் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்தது

ஜனவரி மாத உச்சத்திற்குப் பிறகு படிப்படியாக தங்கம் விலை சரிந்து வந்தது.

தங்கம் விலை

தங்கத்தின் தினசரி விலை சர்வதேச சந்தை விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இறக்குமதி வரிகள் மற்றும் உள்ளூர் நகை வியாபாரிகள் சங்கத்தின் முடிவு ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.

சவரன் ரூ.1¼ லட்சத்திற்கும் மேல்

அந்த வகையில் கடந்த ஒரு ஆண்டாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 15-ந்தேதி சென்னையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக ஒரு சவரன் ரூ.1 லட்சத்தைத் தாண்டியது. அன்று ஒரு கிராம் ரூ.12,515 ஆகவும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 120 ஆகவும் புதிய உச்சத்தைத் தொட்டது.

ஜனவரி மாத இறுதியில் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1.25 லட்சத்திற்கும் மேல் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது.

தங்கம் விலை சரிவு

ஜனவரி மாத உச்சத்திற்குப் பிறகு படிப்படியாக தங்கம் விலை சரிந்து வந்தது. இந்த மாதத் தொடக்கத்தில் ஒரு கிராம் ரூ.13,385, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 80 வரை உயர்ந்திருந்த தங்கம் விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சவரனுக்கு சுமார் ரூ.6 ஆயிரத்துக்கும் மேல் சரிந்துள்ளது.

கடந்த 8-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.13 ஆயிரத்து 160, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 280 ஆகவும் இருந்தது. தொடர்ந்து விலை சரிந்து வந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.12,615, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 920 ஆக இருந்தது. நேற்று கிராமுக்கு ரூ.75-ம், சவரனுக்கு ரூ.600-ம் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,540, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 320-க்கு விற்பனை ஆனது.

ரூ.1 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு 560-ம் குறைந்தது. அதன்படி இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.12,470, ஒரு சவரன் ரூ.99 ஆயிரத்து 760-க்கு விற்பனை ஆகிறது.

கிட்டத்தட்ட 11 மாதங்களுக்கு பின்னர் தங்கம் விலை ரூ.1 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 100 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் தங்கம் விலை 1930-ம் ஆண்டு மிக குறைவாக இருந்தது. அப்போது அப்போது 1 கிராம் தங்கம் ரூ.1.8, ஒரு சவரன் ரூ.14.44 ஆகவும் இருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1964-ம் ஆண்டில் தங்கம் விலை கணிசமாகக் குறைந்து 1 கிராம் ரூ.6.32, ஒரு சவரன் ரூ.50.60 என்ற அளவை எட்டியது.

பெண்கள் மகிழ்ச்சி

கடந்த 10 ஆண்டுகளில் (2016 முதல் 2026 வரை) இந்தியாவில் தங்கத்தின் விலை சுமார் 4.7 மடங்கு உயர்ந்துள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

2016-ம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் சுமார் ரூ.20,975 ஆக இருந்த நிலையில், 2026-ம் ஆண்டு ஜனவரியில் ரூ.1.25 லட்சத்திற்கும் மேல் உச்சம் தொட்டது. இந்த சூழலில் தற்போது தங்கம் விலை ரூ.1 லட்சத்துக்கும் கீழ் அதிரடியாக குறைந்துள்ளது பெண்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT