மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை பகுதிகளில், தங்கு தடையின்றி இணையத்தைப் பயன்படுத்தும் வகையில் இலவச 'வைபை' (Wi-Fi) வசதியைத் தமிழக அரசு மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் மக்கள் அதிகம் வந்து செல்லும் கடற்கரை பகுதிகளான மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளில் முதல்கட்டமாக மக்கள் தங்கு தடையின்றி இணைய பயன்பாட்டை பெறும் வகையில் இலவச 'வைபை' வசதிக்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் 32 இடங்களில் பயன்பாட்டில் இல்லாத இலவச 'வைபை' வசதி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 27 இடங்களிலும், பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் 5 இடங்களிலும் இலவச 'வைபை' வசதி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
பொதுமக்கள் தங்கள் செல்போனில் 'வைபை' ஆன் செய்து 'கிளிக்' செய்தவுடன் வரும் கியூ-ஆர் கோர்டை 'கிளிக்' செய்து செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி எண்ணை பதிவு செய்த உடன் 'வைபை' இணைப்பு ஏற்படும். இதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான இதர கடற்கரைப் பகுதிகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட இடங்களில் பயன்பாட்டில் இல்லாத 'வைபை' வசதியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், புதிய 'வைபை' வசதியை ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.