தமிழக செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள்- முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் ஆலோசனை

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கூட்டத்தைத் தொடர்ந்து, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளை அழைத்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழக சட்டசபையில் விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு, முதலமைச்சர் விஜய் நாள்தோறும் அரசுத் துறைகளின் உயர் அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று தலைமைச் செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை நடத்தினார்.

முக்கிய திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள்

இன்றைய கூட்டத்தில் முதலாவதாக மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்துறை அதிகாரிகளை அழைத்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் பின்வரும் முக்கிய திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மாற்று திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்களை விரைந்து வழங்குவது, ஆட்டிசம் பாதிப்பு அடைந்த சிறப்பு குழந்தைகளுக்கு செயல்படுத்த வேண்டிய திட்டங்கள், குறைதீர்ப்பு முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுப்பது, மாற்றத்திறனாளிகளுக்கான உதவி தொகை உயர்வு, சிறப்பு குழந்தைகளுக்கு பிரத்யேக பள்ளிகள் திறப்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

தொழிலாளர் நலத்துறை

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கூட்டத்தைத் தொடர்ந்து, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளை அழைத்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். இதில் தொழிலாளர்களின் நலன் காக்கும் திட்டங்கள், புதிய வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பட்ஜெட்டில் தொழிலாளர் துறைக்காக ஒதுக்கப்பட வேண்டிய நிதி நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.