தமிழக செய்திகள்

TVK Vijay | பெரம்பூர் தொகுதி விஜய்க்கு கை கொடுக்குமா?

பெரம்பூர் தொகுதியில் மட்டும் த.வெ.க.வுக்கு 45 ஆயிரம் பேர் அடிப்படை உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

மாலை மலர்

சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23-ந் தேதி நடக்க இருக்கிறது. தேர்தலுக்கு நாட்கள் குறைவாக இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தங்களை தயார்படுத்தி வருகின்றன. தி.மு.க. அணி, அ.தி.மு.க. அணி, த.வெ.க., நாம் தமிழர் என 4 முனை போட்டி உறுதியாகி விட்டது.

இந்த தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க. 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது. த.வெ.க. முக்கிய நிர்வாகிகள் தலைநகர் சென்னையில் களம் காண இருக்கிறார்கள்.

குறிப்பாக கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொகுதியை விஜய் தேர்வு செய்வதற்கான காரணம், இந்த தொகுதியில் மட்டும் த.வெ.க.வுக்கு 45 ஆயிரம் பேர் அடிப்படை உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

தொழிலாளர்கள், ஏழை, எளிய மக்கள் அதிகமாக வசிக்கும் இந்த தொகுதியில், மூலக்கடை, கொடுங்கையூர், கண்ணதாசன் நகர், மகாகவி பாரதியார் நகர், வியாசர்பாடி, பார்வதி நகர் பகுதிகள் இடம் பெற்றுள்ளன.வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு பிறகு இந்த தொகுதியில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 792 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் ஆண்கள் 1 லட்சத்து 7 ஆயிரத்து 995 பேரும், பெண்கள் 1 லட்சத்து 14 ஆயிரத்து 726 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 71 பேரும் உள்ளனர்.

கடந்த காலங்களில் இந்த தொகுதியில் (1967-க்கு பிறகு) தி.மு.க. 9 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 3 முறையும். அ.தி.மு.க. 2 முறையும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் ஆர்.டி.சேகரும், அ.தி.மு.க. சார்பில் கூட்டணி வேட்பாளராக என்.ஆர்.தனபாலனும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் 1 லட்சத்து 5 ஆயிரத்து 267 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் என்.ஆர்.தனபாலன் 50 ஆயிரத்து 291 வாக்குகளை பெற்றார். நாம் தமிழர் கட்சி 19,821, மக்கள் நீதி மய்யம் 17,072 வாக்குகளையும் பெற்றது.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிவேல் 79 ஆயிரத்து 974 வாக்குகளும், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட என்.ஆர்.தனபாலன் 79 ஆயிரத்து 455 வாக்குகளையும் பெற்றனர். குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அ.தி.மு.க. பக்கம் சென்றது.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றிவேல் மறைவை தொடர்ந்து, 2019-ம் ஆண்டு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 394 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் 38,371 வாக்குகளை பெற்று, 2-ம் இடத்தை பிடித்தார்.

பெரம்பூர் தொகுதியை பொறுத்தவரையில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகளை பொறுத்தே வெற்றி மாறி, மாறி வந்துள்ளது. கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு கனிசமான வாக்கு வங்கி உள்ள தொகுதி இது.

தற்போது நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில் விஜய் இந்த தொகுதியில் போட்டியிட இருப்பதால் இந்த தொகுதி தற்போது நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது.

விஜய் இங்கு களம் இறங்கும் பட்சத்தில் தி.மு.க., அ.தி.மு.க. தரப்பில் வலுவான வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றே தெரிகிறது. போட்டியும் கடுமையாகவே இருக்கும்.

த.வெ.க.விற்கு இருக்கும் உறுப்பினர் சேர்க்கை, பெண்கள், இளைஞர்கள் ஆதரவை நம்பி இந்த தொகுதியில் களம் இறங்கும் விஜய்க்கு, பெரம்பூர் சாதகமாக இருக்குமா? என்பது தேர்தல் முடிவுகளில் தான் தெரிய வரும்.

விஜய்க்காக தேர்தல் பணிகளில் த.வெ.க.வினர் முழு வீச்சில் களப்பணியில் இறங்கி இருக்கிறார்கள்.