சென்னை:
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் மிகப்பெரிய தொகுதியாக பெரம்பூர் உள்ளது. இங்கு 2 லட்சத்து 21 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள இந்த தொகுதியில் மற்ற சமூகத்தினரும் கணிசமாக இருக்கிறார்கள். சுமார் 30 ஆயிரம் கிறிஸ்தவ வாக்காளர்களும் 10 ஆயிரம் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களும் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தலித், வன்னியர், நாடார், நாயுடு சமூகத்தினர் குறிப்பிடும் படியாக வசிக்கிறார்கள்.
கடந்த காலங்களில் பெரம்பூர் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2 சட்டசபை தேர்தலில் தி.மு.க. போட்டியிடுகிறது. தற்போது இந்த தொகுதியில் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக ஆர்.டி.சேகர் உள்ளார்.
இந்த தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடுவதாக திட்டமிட்டு அதற்கான களப் பணிகள் தொடங்கியுள்ளன. த.வெ.க.வில் உள்ள முக்கிய நிர்வாகிகள் சென்னையில் களம் இறங்க உள்ளனர்.
விஜய் பெரம்பூர் தொகுதியை தேர்வு செய்ததற்கான காரணம், இந்த தொகுதியில் அதிக உறுப்பினர்கள் த.வெ.க.விற்கு இருப்பதாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் மட்டுமில்லாமல் கிறிஸ்தவர்களும் கணிசமாக இருப்பதால் இத்தொகுதியில் களமிறங்க விஜய் முடிவு செய்துள்ளார்.
பெரம்பூரில் நிற்க வேண்டும் என்று கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் வற்புறுத்தி வருகின்றனர். அதன் காரணமாகவே விஜய், பெரம்பூர் தொகுதியை தேர்வு செய்து இருப்பதாக தெரிகிறது.
விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட இருப்பதால் அந்த தொகுதி வி.ஐ.பி. தொகுதியாக மாறி வருகிறது. அதனால் தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸ் துறையினர் அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டி உள்ளது.
இந்த நிலையில் விஜய் கட்சியினர் தேர்தல் பணியை அங்கு தொடங்கி விட்டனர். தேர்தல் பணிமனை அமைக்கும் பணி கண்ணதாசன் நகர் மின்சார வாரியம் எதிரே அமைக்கப்படுகிறது. கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் இந்த பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
விஜய் வடசென்னையின் முக்கிய தொகுதியாக கருதப்படும் பெரம்பூரில் நிற்பதால் தொகுதியில் களை கட்டத் தொடங்கியுள்ளது.
ஆளும் கட்சியான தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. நிர்வாகிகளும் சம பலத்துடன் களத்தில் இறங்கி உள்ளனர். தி.மு.க. மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி சேகர் இத்தொகுதியில் வேட்பாளராக மீண்டும் நிறுத்தப்படுவதால் கட்சியினர் ஆயத்தப் பணிகளை தொடங்கியுள்ளனர்.
கொடுங்கையூர் எம்.ஆர்.நகரில் தேர்தல் பணிமனை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல சிட்கோ மெயின் ரோட்டிலும் ஒரு தேர்தல் பணிமனை அமைக்கப்பட இருக்கிறது.
அ.தி.மு.க. சார்பிலும் இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் தேர்தல் அலுவலகம் அமைக்கும் பணி தொடங்க உள்ளது.
பொதுவாக சட்டசபை பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க.-அ.தி.மு.க. இடையே கடுமையான போட்டி ஏற்படும். ஆனால் இந்த தேர்தல் களத்தில் விஜய் புதிதாக இறங்கி இருப்பதால் பரபரப்புக்கு பஞ்சமில்லை.
தி.மு.க.-அ.தி.மு.க. கூட்டணி கட்சி தொண்டர்கள் வரிந்து கட்டிக் கொண்டு தேர்தல் களத்தில் இறங்கி உள்ளனர். மக்களை சந்தித்து ஓட்டுகளை வேட்டையாட வியூகம் வகுத்து வருகின்றனர்.
பெரம்பூர் தொகுதியில் 7 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள மக்களை சந்தித்து வாக்குகளை அறுவடை செய்வதில் திமுக, அ.தி.மு.க., த.வெ.க., நாம் தமிழர் கட்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.