தமிழக செய்திகள்

DMK கூட்டணியில் சிரித்துக்கொண்டே அழுகிறோம்... ம.தி.மு.க. அவைத்தலைவர் அர்ஜுன ராஜ் வருத்தம்

ம.தி.மு.க.விற்கு ஒதுக்கப்பட்டுள்ள நான்கு தொகுதிகள் குறித்து இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.

மாலை மலர்

தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள 22 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து உள்ளார். 200 தொகுதிகளை வெல்வதே இலக்கு என்று வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள், தே.மு.தி.க.வுக்கு 10, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு 5, இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5, ம.தி.மு.க. 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொ.ம.தே.க. ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதுதவிர கருணாஸ், தமிமுன் அன்சாரி, எஸ்.டி.பி.ஐ. ஆகியவைகளுக்கும் தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து கூட்டணி கட்சிகள் அனைத்தும் தி.மு.க. தொகுதிப் பங்கீடு குழுவிடம், விருப்ப தொகுதிகள் பட்டியலை சமர்ப்பித்துள்ளன. இதில் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, தேசிய செயலர் நிவேதித் ஆல்வா ஆகியோர் அண்ணா அறிவாலயம் சென்று காங்கிரஸ் விருப்ப தொகுதிகள் பட்டியலை வழங்கி உள்ளனர். ம.தி.மு.க. சார்பில் ஆடிட்டர் அர்ஜூன்ராஜ் தலைமையிலான நிர்வாகிகள் விருப்ப தொகுதிகளை தி.மு.க.விடம் கொடுத்து உள்ளனர்.

இந்த நிலையில், சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குழுவுடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் எந்தெந்த தொகுதி என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனையில் ம.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

இதன் பின் வெளியே வந்த ம.தி.மு.க. அவைத்தலைவர் அர்ஜுன ராஜ், சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நாங்கள் சிரித்துக்கொண்டே அழும் நிலையில் இருக்கிறோம் எனதெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், தி.மு.க. கூட்டணியில் தனிச்சின்னத்தில் போட்டியிட முடியவில்லையே என சிரித்துக்கொண்டே அழுகிறோம். நாங்கள் கேட்ட தொகுதிகளை தந்ததில் மகிழ்ச்சி, ஆனால் எண்ணிக்கை குறைத்துக்கொண்டதில் வருத்தம்.

ம.தி.மு.க.வின் தகுதிக்கு தகுந்தாற்போல் எங்களுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ம.தி.மு.க.விற்கு ஒதுக்கப்பட்டுள்ள நான்கு தொகுதிகள் குறித்து இன்று மாலைக்குள் தெரிந்துவிடும் என்றார்.

இதனிடையே, மதுரை தெற்கு, மொடக்குறிச்சி, கோவில்பட்டி, சீர்காழி (தனி) ஆகிய தொகுதிகள் ம.தி.மு.க.வுக்கு

ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.