தமிழக செய்திகள்

TN Assembly Election | திமுக - சிபிஎம் இடையே தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி

பேச்சுவார்த்தையின்போது, 5 தொகுதிகளுக்கு சம்மதிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

மாலை மலர்

தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகிறது. ஏற்கனவே, காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 தொகுதிகள், ம.தி.மு.க.வுக்கு 4, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த முறை 5 தொகுதிகள் ஒதுக்க தி.மு.க. தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஏற்றுக்கொள்ளவில்லை.

இதையடுத்து சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின்போது, 5 தொகுதிகளுக்கு சம்மதிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து மாநில செயற்குழுவில் பேசி முடிவு எடுக்கப்படும் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

இதனால் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக - சிபிஎம் இடையே இழுபறி நீடிக்கிறது.