சென்னை:
சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் தொடங்கிய நேர்காணலில் புதுச்சேரி, காரைக்காலில் போட்டியிட விருப்ப மனு அளித்து இருந்த தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் சுமார் 120-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று மதுரை, நெல்லை உள்பட தென் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு கொடுத்து இருந்தவர்களை அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். இதில் மொத்தம் 1720 பேர் பங்கேற்றனர்.
இதை தொடர்ந்து இன்று 3-வது நாளாக அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். இந்த நேர்காணலில் கரூர், நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, ஈரோடு வடக்கு, ஈேராடு தெற்கு, ஈரோடு மத்திய, கோவை வடக்கு, கோவை மாநகர், கோவை தெற்கு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் மத்திய, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட ஏராளமானோர் இன்றைய நேர்காணலில் பங்கேற்றனர்.
இன்று மாலை கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, திருப்பூர் கிழக்கு, திருப்பூர் தெற்கு, திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் நேர்காணலில் கலந்து கொள்கின்றனர்.