பெண்களை இழிவுபடுத்தும் அ.தி.மு.க.வுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் - அமைச்சர் கீதாஜீவன்

பெண்களின் முன்னேற்றத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் அ.தி.மு.க.வினர் பெண்களைத் தரக்குறைவாகப் பேசி வருகிறார்கள்.
பெண்களை இழிவுபடுத்தும் அ.தி.மு.க.வுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் - அமைச்சர் கீதாஜீவன்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசியல் நாகரீகமோ, அடிப்படை அறமோ இல்லாமல் பெண்களை இழிவுபடுத்துவதையே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சா் சி.வி. சண்முகம் எம்.பி வாடிக்கையாகக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு அரசின் இலவசத் திட்டங்களோடு பெண்களையும் ஒரு பொருளாக ஒப்பிட்டு அருவருக்கத்தக்க கருத்தை வெளியிட்ட அவர், தற்போது மீண்டும் பெண்களை கொச்சைப்படுத்தி பேசி உள்ளார். இது பெண்களை பற்றிய அ.தி.மு.க.வின் இழிவான மனநிலையை வெளிப்படுத்துகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் “திராவிட மாடல்” ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம் எனப் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் பெண்களின் உயர்கல்வி 52 சதவீதமாக உயர்ந்துள்ளதுடன், உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது.

பெண்களின் முன்னேற்றத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் அ.தி.மு.க.வினர் பெண்களைத் தரக்குறைவாகப் பேசி வருகிறார்கள். ஓர் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல், ஒரு மனிதராக இருப்பதற்குக் கூட சி.வி. சண்முகம் தகுதியற்றவர். பெண்களை இழிவுபடுத்தி வரும் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு, சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com