தமிழக செய்திகள்

தமிழக சட்டசபை தேர்தல்: களத்தில் 4,023 வேட்பாளர்கள் போட்டி - நாளை வாக்குப்பதிவு

தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆகும்.

தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்ட தொடங்கியது. இந்த தேர்தலில் தி.மு.க.. அ.தி.மு.க., த.வெ.க., நாம் தமிழர் என நான்கு முனை நிலவுகிறது.

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர வாக்காளர் திருத்தப்பணி மற்றும் விஜய்யின் அரசியல் வரவால் இந்த தேர்தல் கணிக்க முடியாத அளவில் உள்ளது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு கட்சிகளும் வெற்றியை நிலை நாட்ட கடும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வழக்கம்போல இந்த சட்டசபை தேர்தலும், கோடை காலத்தில் நடப்பதால் கடும் வெப்பம் இருந்தது. ஆனால் தலைவர்கள், வேட்பாளர்கள், தொண்டர்கள் எல்லாம் அதனை பொருட்படுத்தவே இல்லை. இந்த கோடை வெப்பத்தைவிட, அவர்களின் பிரசாரம் அனல் பறந்தது.

தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், நேற்று மாலை 6 மணியுடன் தமிழகம் முழுவதும் பிரசாரம் ஓய்ந்தது. முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், கடந்த 31-ந் தேதி திருவாரூரில் தனது பிரசாரத்தை தொடங்கி நேற்று தனது பிரசாரத்தை தான் போட்டியிடும் கொளத்தூரில் நிறைவு செய்தார்.

மயிலாப்பூரில் தனது பிரசாரத்தை தொடங்கிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார். த.வெ.க. தலைவர் விஜய், தனது வேட்பு மனுவை பெரம்பூரில் தாக்கல் செய்துவிட்டு, அங்கே பிரசாரத்தை தொடங்கி நேற்று சென்னை நந்தனத்தில் நிறைவு செய்தார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும், அ.ம.மு.க. தலைவர் டி.டி.வி.தினகரன் காரைக்குடி தொகுதியிலும், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா தான் போட்டியிடும் விருத்தாசலம் தொகுதியிலும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் திருக்கோவிலூரிலும் தங்களது இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டனர். தஞ்சையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும், கும்பகோணத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும் இறுதி கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தனர்.

இந்த தேர்தலில் 4,023 தகுதியுள்ள வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். அவர்களில் 3.579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள். ஒருவர் மூன்றாம் பாலினத்தவராகும்.

தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆகும். அவர்களில் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர் ஆண்கள், 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்கள், 7,728 பேர் மூன்றாம் பாலினத்தவராகும்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை சுதந்திரமாக நடத்த தமிழகத்திற்கு 326 தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் கமிஷன் அனுப்பி வைத்துள்ளது.

அவர்களில் 136 பேர் பொதுப்பார்வையாளர்கள், 40 பேர் போலீஸ் பார்வையாளர்கள், 150 பேர் செலவினப் பார்வையாளர்கள். இந்த தேர்தல் காலகட்டத்தில் பறக்கும் படையினரால் ரூ.1,200 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

300 கம்பெனி துணை ராணுவத்தினரும், 1.20 லட்சம் தமிழக போலீசாரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பணிகளுக்காக 3.60 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மொத்தமுள்ள 75 ஆயிரத்து 54 ஆயிரம் வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கை உறுதி செய்யும் 'விவிபாட்' எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இந்த எந்திரங்கள் அனைத்தும் இன்று காலை முதல் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட உள்ளன.

இதற்காக தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபாட் கட்டுப்பாட்டு எந்திரங்கள் பாதுகாப்பாக வாகனங்களில் எடுத்துச்செல்லப்படுகின்றன.

அவை அதற்கான வாக்குச்சாவடிகளில் இன்று நிறுவப்படும். அந்தப் பணியை பெல் நிறுவன பொறியாளர்கள் மேற்கொள்வார்கள். அந்த வகையில் தமிழகத்தின் அனைத்து 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகளுக்கும் இன்று இந்த எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு நிறுவப்பட்டுவிடும்.

மேலும் தேர்தல் பணியாளர்களுக்கு இன்று இறுதிக்கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் பயிற்சியை முடித்ததும் தேர்தல் பணிக்கான உத்தரவு வழங்கப்படும். அதை பெற்றுக்கொண்டு அந்தந்த வாக்குச்சாவடிக்கு இன்றே சென்றுவிடுவார்கள். இன்று இரவில் அவர்கள் அங்குதான் தங்க வேண்டும்.

பெண் பணியாளர்கள் மட்டும் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பே, அதாவது நாளை காலை 5.30 மணிக்கு முன்பே தங்களுக்கான வாக்குச்சாவடிகளுக்கு வந்துவிட வேண்டும்.

நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறும். வாக்குப்பதிவு தொடங்க 1 மணி நேரத்திற்கு முன்பதாக மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும். அப்போது வாக்குச்சாவடி தலைமை அலுவலர், மற்ற 3 அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் இருப்பார்கள்.

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு உள்ளேயும், வெளியேயும் சிசிடிவி வைக்கப்பட்டிருக்கும். அங்கு நடக்கும் வாக்குப்பதிவை நேரடியாக கண்காணிக்க 3 வகை கட்டுப்பாட்டு அறைகளை தேர்தல் கமிஷன் அமைத்துள்ளது.

அதன்படி, தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அதிகாரி ஆகியோரின் கட்டுப்பாட்டில் வரும் வகையில் அவை அமைக்கப்பட்டுள்ளன. தலைமை தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டில் வரும் அறை, சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.