‘கொளத்தூர் என்னுடைய செல்லக்குழந்தை’ - இறுதிகட்ட பிரசாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

கொளத்தூரில் இன்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரை நிறைவுப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
‘கொளத்தூர் என்னுடைய செல்லக்குழந்தை’ - இறுதிகட்ட பிரசாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
Published on

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் திருவாரூரில் தொடங்கிய தேர்தல் பிரசாரத்தை இறுதியாக தனது சொந்த தொகுதியாக கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவு செய்தார். அப்போது பேசிய அவர்,

“என்னதான் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிற்கும் நான் முதலமைச்சராக இருந்தாலும், சென்னை நான் பாசமாக வளர்த்த குழந்தை போன்று. ஏனென்றால் நான் அந்தளவிற்கு உங்களோடு ஒன்றி இருப்பவன். அதுமட்டுமல்ல, சென்னைக்கு மாநகரத் தந்தையாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயராக இருந்தவன் நான்.

சென்னை பல கனவுகளுடன் நான் உருவாக்கிய திட்டங்களால் வளர்ந்திருக்கும் மாநகரம். அதனால்தான் அப்படிச் சொல்கிறேன். அதிலும், நம்முடைய கொளத்தூர் என்னுடைய செல்லக் குழந்தை.

பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் எனப் பண்டிகைகளைக்கூட, நான் உங்களுடன்தான் கொண்டாடி இருக்கிறேன். முதலமைச்சர் பொறுப்பில் இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத்திற்கும் சுற்றுப்பயணம் சென்றாலும், பத்து நாட்களுக்கு ஒருமுறை கொளத்தூருக்கு வராமல் என்னால் இருக்கவே முடியாது.

ஒரு வாரம் ஆனால், அமைச்சர் சேகர்பாபுவிடம், “எப்போது தொகுதிக்குச் செல்லலாம்? தொகுதியில் என்ன வேலை நடக்கிறது?” என்று நானே கேட்க ஆரம்பித்துவிடுவேன். தேர்தல் அறிவித்ததும் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தேன்; அடுத்து இப்போதுதான் பிரச்சாரத்தின் கடைசி நாள் உங்களிடம் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்.

ஏனென்றால், அந்த அளவிற்கு இந்தத் தொகுதிக்குத் தொடர்ந்து வந்து அனைத்துப் பணிகளையும் செய்து கொடுத்திருக்கிறேன். நான் செய்து கொடுத்த திட்டப் பணிகள்தான் எனக்காக இங்கு ஓட்டு கேட்டிருக்கின்றன. மற்ற வேட்பாளர்களுக்காகத் தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்த நான், என்னுடைய தொகுதியில் மொத்தமாகவே ஒரு மணி நேரம்தான் சுற்றியிருக்கிறேன். கொளத்தூர் மக்கள் என் மேல் காட்டும் அன்பு அப்படிப்பட்டது.

வருடம் முழுவதும் நன்றாகப் படித்த மாணவன் தேர்வுக்கு முன்பு சிறியதாக ‘revise’ செய்தாலே போதும். அதுபோன்று, இத்தனை ஆண்டு உங்களுக்காக உழைத்திருக்கிறேன். நான் செய்த திட்டங்களே எனக்காகப் பேசும். ஒவ்வொரு ஊருக்கும் சென்றபோது, அங்கு போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்தேன். கொளத்தூரில் எனக்கு நானே அறிமுகம் கொடுத்துக் கொள்கிறேன்.

உங்களுக்காக உழைத்து இத்தனை திட்டங்களைக் கொளத்தூருக்குக் கொண்டு வந்த உங்களில் ஒருவனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு மூன்று முறை வாய்ப்பு கொடுத்தீர்கள். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து இன்னொரு முறையும் எனக்கு வாய்ப்பு கொடுங்கள்.” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com