தமிழக செய்திகள்

நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் - சாதி கொடிகள் எடுத்துச் செல்ல தடை

ஆனித் தேரோட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு பணிகள் கண்காணிக்கப்பட உள்ளன.

நெல்லையப்பர் ஆனி தேரோட்டம்:

திருநெல்வேலியில் உள்ள மிக பழமையான அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலின் ஆனித் தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது.

இந்த தேர் திருவிழாவில் கோவிலை சுற்றியுள்ள ரத வீதிகளின் வழியே, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கயிறுகள் மூலம் தேரை இழுத்து வருவார்கள்.

இந்த ஆனித் தேரோட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, ட்ரோன் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பாதுகாப்பு பணிகள் கண்காணிக்கப்பட உள்ளன.

ஆனித்தேரோட்டத்தில் சாதி அடையாளங்கள் பயன்படுத்த தடை:

இந்நிலையில் சமூக நல்லிணக்கத்தையும் அமைதியான முறையில் திருவிழா நடைபெறுவதையும் உறுதி செய்வதற்காக, சாதி அடிப்படையிலான கொடிகள் மற்றும் பதாகைகளை எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகர காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் கூறுகையில், “மாநிலம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் வருடாந்திர கோயில் திருவிழா, சுமூகமாகவும் அமைதி மற்றும் நல்லிணக்கத்துடனும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பொது அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கக்கூடிய எந்தவொரு செயலுக்கும் உடனடியான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று அவர் கூறினார்.