தமிழக செய்திகள்

ஒரே குடும்பத்தில் 3 டாக்டர்கள்! நீட் தேர்வில் வென்று நெசவாளர் மகன்கள் அசத்தல்!

வறுமை சூழலிலும் விடாமுயற்சியால் சாதித்த இந்தச் சகோதரர்களுக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குளி கிராமத்தைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி ராம்குமார் - மங்கையர் திலகம் தம்பதியின் மூன்று மகன்கள், அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்துப் பெருமை சேர்த்துள்ளனர்.

விடாமுயற்சியால் வென்ற மூத்த மகன்

ராம்குமாரின் மூத்த மகனான வெங்கட் ஸ்ரீ, கடந்த 2023-ஆம் ஆண்டு பிளஸ்-2 தேர்ச்சி பெற்று, தொடர்ந்து 2 ஆண்டுகள் நீட் தேர்வு எழுதியும் போதிய மதிப்பெண் கிடைக்காத சூழலில், சோர்ந்து போகாமல் விடாமுயற்சியுடன் மீண்டும் தேர்வு எழுதி 440 மதிப்பெண்கள் பெற்றார்.

ஒரே முயற்சியில் சாதித்த இரட்டையர்கள்

அண்ணன் வழியைப் பின்பற்றி, அவரது இரட்டைச் சகோதரர்களான அருண் மற்றும் தரண் ஆகிய இருவரும் இந்த ஆண்டு அரசுப் பள்ளியில் பிளஸ்-2 முடித்து முதன்முறையாக நீட் தேர்வை எதிர்கொண்டனர். இதில் அருண் 511 மதிப்பெண்களும், தரண் 494 மதிப்பெண்களும் பெற்று அசத்தினர்.

மருத்துவக் கல்லூரிகளில் இடம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீட்டின் கீழ் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் மூன்று சகோதரர்களுக்கும் சேர்க்கை உறுதியானது. மூத்த மகன் வெங்கட் ஸ்ரீக்கு நாகர்கோவில் அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும், அருணுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியிலும், தரணுக்கு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியிலும் இடங்கள் கிடைத்துள்ளன. வறுமை சூழலிலும் விடாமுயற்சியால் சாதித்த இந்தச் சகோதரர்களுக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.