தமிழக செய்திகள்

’இது தாயின் உரிமை’: 32 வார கர்ப்பத்தை கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

குழந்தையைப் பெற்றெடுப்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது தாயின் உரிமை சம்பந்தப்பட்டது என நீதிபதி கருத்து.

கருவில் உள்ள குழந்தைக்கு குறிப்பிடத்தக்க குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், 32 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

2024-ம் ஆண்டு முதல் குழந்தையைப் பெற்றெடுத்த பெண் ஒருவர், இந்த ஆண்டு மீண்டும் கர்ப்பமானார். கர்ப்ப கால பரிசோதனையின்போது, கருவில் உள்ள குழந்தைக்கு மூளையில் திரவம் தேங்குவதால் ஏற்படும் வென்ட்ரிகுலோமேகலி (Ventriculomegaly) என்ற பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அடுத்தடுத்த மருத்துவப் பரிசோதனைகளிலும் இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனால் குழந்தை பிறந்த பிறகு பேச்சு மற்றும் மொழி வளர்ச்சியில் தாமதம், கற்றல் குறைபாடுகள், அறிவாற்றல் பாதிப்பு, வலிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கணவன்-மனைவி இருவரும் கர்ப்பத்தை கலைக்க முடிவு செய்தனர். ஆனால், மருத்துவக் குழுவினர் இதற்கு அனுமதி அளிக்காததால், அந்தப் பெண் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார்.

முடிவு எடுப்பது தாயின் உரிமை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, கருவில் குறிப்பிடத்தக்க குறைபாடுகள் இருப்பது மருத்துவ அறிக்கைகள் மூலம் தெரியவருவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், குழந்தை பிறந்த பிறகு அதன் வாழ்க்கைத் தரம், சுயமாக வாழ்வதற்கான வாய்ப்புகள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சிரமங்கள் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

கருவில் உள்ள குழந்தையின் உடல்நிலை தொடர்பான பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, அந்தக் குழந்தையைப் பெற்றெடுப்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்யும் உரிமை தாய்க்கு இருப்பதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட பெண்ணின் கர்ப்பத்தை உடனடியாக கலைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT