திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக எழுந்துள்ள சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை தொடர்ந்து, மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, மதுரை மாவட்ட எல்லைக்குள் எந்தவிதமான பொதுக்கூட்டம், ஊர்வலம். ஆர்ப்பாட்டம், போராட்டம் அல்லது பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. திருப்பரங்குன்றம் மலைக்கு பொதுமக்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது நேற்று இரவு 9 மணி முதல் நவம்பர் 25-ந் தேதி (நாளை) காலை 10 மணி வரை இந்தத் தடை உத்தரவு அமலில் இருக்கும்.
உரிய அதிகாரியிடம் அனுமதி பெற்று நிபந்தனைகளுடன் நடத்தப்படும் கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் நிகழ்ச்சிகள், மேலும் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான உத்தரவுகளைச் செயல்படுத்தும் நடவடிக்கைகளுக்கும், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கோவில் நிர்வாகத்தின் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் நடைபெறும் வழக்கமான சடங்குகள் மற்றும் திருவிழாக்கள், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள வழக்கமான மத வழிபாடுகள் மற்றும் தர்கா உள்ளிட்ட நிறுவனங்களின் சட்டப்பூர்வமான செயல்பாடுகளுக்கும், காவல்துறையின் ஒழுங்குமுறைக்கு உட்பட்டு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி தீபம் ஏற்ற வேண்டும். கலெக்டரின் 144 தடை உத்தரவு சட்டவிரோதமானது. மதுரை மாவட்ட ஆட்சியரின் 144 தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தீபம் ஏற்றுவதை பக்தர்கள் தரையில் இருந்தவாறு பார்வையிட அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையில் அவசர வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன், சுமதி ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது அரசு தரப்பில், இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில நிலுவையில் உள்ளது. இங்கு விசாரிக்க கூடாது என வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் மதுரை கலெக்டர் கண்டிப்பாக இன்று நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
மனுதாரர்: மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்கு உத்தரவிட்ட போதும் சுப்ரீம் கோர்ட்டில் மாநில அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
நீதிபதிகள்: சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தவற்கு அரசுக்கு உரிமை உள்ளது.
மனுதாரர்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நிறைவேற்றாமல் தடுக்கவே 144 தடை உத்தரவு பிறப்பித்தது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கையாகும்.
நீதிபதிகள்: நீதிமன்ற அவமதிப்பை எதிர்கொள்ள ஆட்சியருக்கு தைரியம் இருக்கிறது போல திறமையான இளம் ஆட்சியர் அவர்.
மனுதாரர்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நிறைவேற்றாமல் தடுக்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கையாகும். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் செய்துள்ளனர். திருப்பரங்குன்றம் பகுதிக்கு வர முயன்றவர்கள் வரும் வழியிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிபதிகள்: இது தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன? 144 தடை உத்தரவு போடப்பட்டது ஏன்?
திருப்பரங்குன்றத்திற்கு வந்து கொண்டிருந்த ஒரு வழக்கறிஞர் கூட கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவை இடையூறு செய்வதற்காக நாங்கள் இங்கு வரவில்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவை நாங்கள் மீற முடியாது. இந்த விவகாரத்தில் நாங்கள் பொறுப்புடன் செயல்படுவோம். கடவுளை வணங்கும் உரிமையை கூட மறுத்தால் எப்படி?
சுப்ரீம் கோர்ட் உத்தரவை நாங்கள் மீறவில்லை. உத்தரவு செயல்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்ய அதிகாரம் உள்ளது. அதை அமல்படுத்துவது குறித்து தலையிட வேண்டி உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கு விசாரணை இன்று மாலை 4 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.