தேனி அருகே பழனி செட்டிபட்டி ஆர்.எம்.டி.சி காலனியை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி லட்சுமி (வயது 53). இவரது மகன் பாண்டித்துரை காவலராக பணிபுரிந்து வருகிறார். மகள் லாவண்யா தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக தொழிலாளர் நலத்துறையில் கணினி விவர பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
வேளாங்கன்னியில் நடைபெற்ற உறவினர் வீட்டு விசேசத்திற்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினர், உறவினர்களோடு சென்றனர். மீண்டும் ஊர் திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. திறந்து கிடந்த பீரோவை சோதனை செய்தபோது அதில் இருந்த நெக்லஸ், செயின், தோடு, பிரேஸ்லெட், வளையல் உள்ளிட்ட 91 பவுன் தங்கநகை மற்றும் வெள்ளி பொருட்கள், ரூ.3 லட்சம் பணம் திருடு போனது தெரியவந்தது.
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பழனி செட்டிபட்டி போலீசில் லட்சுமி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி அருகே தப்புக்குண்டு பகுதியில் உள்ள தனியார் மில்லில் தலைமை காவல் அதிகாரியாக சிவக்குமார் (வயது 55) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் மில்லில் இருந்த வாட்டர் பம்பு, மின்மோட்டார் உள்ளிட்ட ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனதாக வீரபாண்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
தேனி பகுதியில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.