இயற்கையின் மாபெரும் அதிசயங்களில் ஒன்றாக மேற்குத் தொடர்ச்சிமலை உள்ளது. இந்த மலை தற்போது நாட்டின் மிகப்பெரிய காட்டு யானை வாழ்விடமாக தொடர்ந்து நீடித்து வருகிறது.
2025–-26ம் ஆண்டுக்கான சமீபத்திய டி.என்.ஏ. அடிப்படையிலான வனஉயிரின கணக்கெடுப்பின்படி, மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 11 ஆயிரத்து 934 காட்டு யானைகள் வசிப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் உலகின் மிக முக்கியமான ஆசியயானை வாழிடங்களில் ஒன்றாக மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் முக்கியத்துவம் நிரூபிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் 6,013, தமிழகத்தில் 3,136, கேரளத்தில் 2,785 யானைகள் உள்ளன. இந்த 3 மாநிலங்களையும் இணைக்கும் வனப்பகுதிகள், யானைகள் இயற்கையாக இடம்பெயர்ந்து வாழ உதவும் மிக முக்கியமான உயிரியல் வழித்தடங்களாக உள்ளன.
அதிலும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையின் பல்வேறு வனப்பகுதிகள் இன்று ஆயிரக்கணக்கான யானைகளின் பாதுகாப்பான வாழ்விடங்களாக திகழ்கின்றன.நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், பெரியார் புலிகள் காப்பகம், அகஸ்திய
மலை வனப்பகுதி ஆகியவை யானைகளுக்கு மட்டுமின்றி புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, அரிய பறவைகள் மற்றும் எண்ணற்ற தாவர இனங்களின் பாதுகாப்பு கோட்டையாக விளங்கி வருகின்றன.
ஒரு காட்டு யானை என்பது வெறும் வனவிலங்கு அல்ல, அது ஒரு காட்டை உருவாக்கும் உயிரினம், இயற்கையின் இதயத்துடிப்பு என்று வனவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். யானைகள் விதைகளை பல கி.மீ. தூரத்துக்கு பரப்பி புதிய காடுகள் உருவாக உதவுகின்றன.
மேலும் வனப்பாதைகளை உருவாக்கி, நீர்நிலைகளை பராமரித்து, பல்லுயிர் சமநிலையை காக்கும் முக்கிய உயிரினமாகவும் திகழ்கின்றன.
யானைகளின் எண்ணிக்கை மேற்குத் தொடர்ச்சி மலையில் நிலைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக இருந்தாலும், அவற்றின் எதிர்காலம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அதிலும் குறிப்பாக யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு, மனித–யானை மோதல்கள், சட்டவிரோத கட்டுமானங்கள், வனப்பகுதியில் அதிகரிக்கும் மனித தலையீடு ஆகியவை யானைகளின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் இன்றைக்கு யானைகளின் தலைநகராக உள்ளது. இங்குள்ள உயிர்க்கோள காப்பகம், இந்தியாவின் மிக முக்கியமான யானை வாழ்விடமாக மட்டுமின்றி உலகின் சிறந்த பல்லுயிர் வள மண்டலங்களில் ஒன்றாகவும் உள்ளது என்று தெரியவந்து உள்ளது.