அரியலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தளவாய் அருகே உள்ள ஆதனக்குறிச்சியில் ஊர்க்காவல் படையைச் சார்ந்த வெங்கடேசன் என்பவர், கடந்த அக்டோபர் 29ம் தேதி மது போதையில் இருந்த இளைஞர்களால் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது (நவ.01) அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்
இந்த நிலையில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்க்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை அரசு உயர்த்தி தர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார், இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
செந்துறை ஒன்றியம், நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் அவர்கள், மனைவியை இழந்தவர். அவரின் இரு குழந்தைகளை, தனது குறைந்த ஊதியத்தை கொண்டு பராமரித்து வந்தார். தற்போது அவ்விரு பிள்ளைகளும் தாயையும் தந்தையையும் இழந்து பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அக்குழந்தைகளுக்கும், அவரது குடும்பத்தை சேர்ந்த உற்றார் உறவினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த கொலையில் தொடர்புடைய அந்த போதை கும்பல் உடனடியாக கைதுச் செய்யப்பட்டுள்ளது என்றாலும், அவர்களைபபிணையில் வெளிவிடாத வகையில் “குண்டர் தடுப்பு காவல்” சட்டத்தில் சிறைபிடித்து வழக்கை விரைந்து நடத்தி அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க ஆவன செய்ய வேண்டும்.
அத்துடன், மது மற்றும் போதை பொருட்களால் அங்கிங்கெனாதபடி தமிழ்நாடு முழுவதும் இளம் தலைமுறையினர் வெகுவான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். கிராமப்புறங்களில் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் வன்முறை வெடிக்க இவர்களும் காரணமாக உள்ளனர். போதை பழக்கத்திற்கு அடிமையாகும் இளம் தலைமுறையினரால் அவரவர் குடும்பத்தை சார்ந்தவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்படுகின்றது. இதனால், இளம் தலைமுறையினர் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே, மதுக்கடைகளைப் படிப்படியாக மூடுவதற்கும் போதை பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்தி அவற்றை முற்றாக அழித்தொழிப்பதற்கும் உரிய பொறுப்புணர்வுடன் தமிழ்நாடு அரசு செயல்திட்டங்களை வரையறுத்து அவற்றைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.
போதை கும்பலின் தக்குதலுக்குப் பலியான வெங்கடேசன் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு ரூபாய 5 இலட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது. எனினும், அவரது இரண்டு பிள்ளைகளின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு இழப்பீட்டு தொகையினை ரூபாய் 50 இலட்சமாக உயர்த்தி வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
என்று தெரிவித்துள்ளார்.