தமிழக செய்திகள்

செக்கானூரணி காவல் மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் - கனிமொழி

பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதும், குற்றவாளிகளைக் காப்பாற்றுவதும்தான் இந்த அரசின் ஒரே கொள்கையா?

மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் சரக்கு வாகன ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த வழக்கில், உடற்கூராய்வு அறிக்கையில் உடலில் காயங்கள் இருப்பது உறுதியாகியும் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தக் கேடுகெட்ட ஆட்சியில் பாலகிருஷ்ணன் அவர்களின் உயிரிழப்புக்கு நீதி கிடைப்பது கடினம். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் கண்டனம்

மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் சரக்கு வாகன ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த வழக்கில், உடற்கூராய்வு அறிக்கையில் உடலில் காயங்கள் இருப்பது உறுதியாகியும் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

உடற்கூராய்வு அறிக்கை வந்தும் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்

உடற்கூராய்வு அறிக்கையில் காயங்கள் இருப்பது தெளிவாகத் தெரிந்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது ஏன் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், விசாரணை அலுவலர் மீதே நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் எச்சரித்தனர்

காவல் நிலைய கொடுமையால் உயிரிழந்திருப்பது உறுதி ஆனால் இதற்கு யார் காரணம் என்பதுதான் தற்போது பிரச்சினை" எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், செக்கானூரணி காவல் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் முதல் கான்ஸ்டபிள் வரை அனைவருமே இந்த வழக்கில் கைது செய்யப்படக் கூடியவர்கள்தான் எனக் காட்டமாகத் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து திமுக எம்பி கனிமொழி தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

இன்னும் எத்தனை உண்மைகளை அரசு மறைக்கப்போகிறது

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், அவர் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டு சித்திரவதையால் உயிரிழந்துள்ளதாகவும், அப்போது காவல் நிலையத்தில் இருந்த அனைத்து காவலர்களும் கைது செய்யப்படத் தகுதியானவர்களே என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடுமையாகக் கண்டித்துள்ளது.

புகாரளிக்க வந்தவரையே தாக்கிச் சித்திரவதை செய்துவிட்டு, அதனைத் தற்கொலை என தவெக அரசு நாடகமாடியிருக்கிறது. இன்னும் எத்தனை உண்மைகளை இந்த அரசு மறைக்கப் போகிறது? சமரசம் செய்துகொள்ள ரூ. 3 லட்சமும் அரசு வேலையும் தருவதாகக் காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள் என பாலகிருஷ்ணனின் மனைவி சுதா குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு அரசு என்ன பதிலளிக்கப் போகிறது?

வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்

பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதும், குற்றவாளிகளைக் காப்பாற்றுவதும்தான் இந்த அரசின் ஒரே கொள்கையா? பொய்களை மட்டுமே பேசி ஆட்சி செய்யும் இந்தக் கேடுகெட்ட ஆட்சியில் பாலகிருஷ்ணன் அவர்களின் உயிரிழப்புக்கு நீதி கிடைப்பது கடினம். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.

என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT