தமிழக செய்திகள்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்! - மு.க.ஸ்டாலின்

“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது.

பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்! என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியார் பிறந்தநாள்

தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 17-ந்தேதியான இன்று கொண்டாடப்படுகிறது.

சமூக நீதி நாள்

பெரியாரின் பிறந்தநாளை தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் 'சமூக நீதி' நாளாக கடைபிடித்து வருகிறது.

சுயமரியாதை இயக்கம்

சமூகத்தில் நிலவிய மூடநம்பிக்கைகள், சாதி வெறி மற்றும் சமத்துவமின்மையை எதிர்த்து 1925-ம் ஆண்டு 'சுயமரியாதை இயக்கத்தைத்' தொடங்கினார்.

வைக்கம் வீரர்

கேரளாவில் உள்ள வைக்கம் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலை ஒட்டிய வீதிகளில் நடக்க தடை விதிக்கப்பட்டதை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டதால் 'வைக்கம் வீரர்' எனப் போற்றப்பட்டார்.

பெண்கள் கல்வி உரிமை

பெண்களின் கல்வி உரிமை, கைம்பெண் மறுமணம், சொத்துரிமை மற்றும் சுயமரியாதைத் திருமணங்களுக்காக வாழ்நாள் முழுவதும் பெரியார் குரல் கொடுத்தார்.

மு.க.ஸ்டாலின்

தந்தை பெரியாரின் 147-வது பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தமிழர் தலைமுறை தலைநிமிரப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்!

பல தலைமுறைகள் ஆதிக்கத்துக்குப் பணிந்தன.

ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டது.

பல தலைமுறைகள் அதன் மாற்றத்தைக் காண்கின்றன.

ஆனாலும், ஆதிக்கம் இன்னும் முற்றாக அகலவில்லை. அதனை அடையாளம் காண வேண்டியது வரும் தலைமுறைகளின் பொறுப்பும்கூட!

வெளிச்சமற்ற இடம் இருள்; கேள்விகளற்ற சமூகம் அதைவிடப் பேரிருள்.

“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது.

பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT