தமிழகத்தில் உள்ள 107 அரசு மருத்துவமனைகளிலும் இந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் இன்றே தொடங்கப்பட்டு அந்தந்த பகுதி அமைச்சர்கள் மற்றும் எல்.எல்.ஏ.க்கள் குழந்தைகளுக்கு மோதிரங்களை அணிவித்தனர். இதற்காக ஏற்கனவே தங்க மோதிரங்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு பாதுகாப்பு பெட்டகங்களில் தயார் நிலையில் இருந்தது.
தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலின்போது, தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. முதன்முறையாக ஆட்சி அமைத்தது.
இதையடுத்து தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதலமைச்சர் விஜய் கடந்த ஜூன் 22-ந்தேதி அறிவித்தார்.
அதன்படி இந்த திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் 6.11 லட்சம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக இந்த ஆண்டு ரூ.560 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தங்க மோதிரம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடங்கின.
திட்டம் அறிவிக்கப்பட்ட ஜூன் 22-ந்தேதி முதல் இன்று (செப்டம்பர் 28-ந்தேதி) வரை பிறந்துள்ள குழந்தைகளுக்கு அணிவிப்பதற்காக 1 கிராம் எடையுள்ள 1.28 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. சிறப்பு வாய்ந்த இத்திட்டத்தை முதலில் தாய்மாமன் பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தொடங்கி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த திட்ட தொடக்கவிழா மதுரைக்கு மாற்றப்பட்டது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் இன்று திட்டமிட்டபடி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள 107 அரசு மருத்துவமனைகளிலும் இந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் இன்றே தொடங்கப்பட்டு அந்தந்த பகுதி அமைச்சர்கள் மற்றும் எல்.எல்.ஏ.க்கள் குழந்தைகளுக்கு மோதிரங்களை அணிவித்தனர். இதற்காக ஏற்கனவே தங்க மோதிரங்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு பாதுகாப்பு பெட்டகங்களில் தயார் நிலையில் இருந்தது.
மதுரை மாவட்டத்தில் மட்டும் 6,400 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை மதுரை வந்தார்.
விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் ஆனந்த், அருண்ராஜ், நிர்மல் குமார், ஜெகதீஸ்வரி, விஸ்வநாதன், கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.தங்கப்பாண்டி, விஜய் அன்பன் கல்லாணை, கார்த்திகேயன், கோபிசன், விஜய் மற்றும் தென்மண்டல ஜ.ஜி. விஜேந்திர பிதாரி, டி.ஜ.ஜி. அபிநவ்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், மாநகராட்சி கமிஷனர் கவுரவ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து பிரத்யேக திறந்தவெளி வாகனத்தில் புறப்பட்ட முதலமைச்சர் ரோடு-ஷோ மூலம் பொதுமக்களை சந்தித்தார். வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள், பெண்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாலையின் இருபுறமும் திரண்டிருந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முக்கிய பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.
பொதுமக்களிள் உற்சாக வரவேற்பையடுத்து முதலமைச்சர் விஜய், பெருங்குடி, மண்டேலாநகர், சிந்தாமணி ரிங்ரோடு, கருப்பாயூரணி வழியாக விழா நடைபெறும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையை வந்தடைந்தார். அங்கு முதலமைச்சர் விஜயை அமைச்சர்கள், த.வெ.க. நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
தொடர்ந்து மருத்துவமனையின் கருத்தரங்க கூடத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்ட விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. விழாவில் அமைச்சர் அருண்ராஜ், ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ குறித்து பேசினார். இதனை தொடர்ந்து இத்திட்டம் தொடர்பான சிறப்பு காணொலியை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்தார். விழா மேடையில் 30 குழந்தைகளுக்கு 1 கிராம் எடையுள்ள தங்க மோதிரங்களை வழங்கினார். முன்னதாக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேர்வு செய்யப்பட்ட பெண்கள் பிறந்த குழந்தைகளுடன் வந்து மோதிரங்களை பெற்றுக் கொண்டு முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்தனர்.