தமிழக செய்திகள்

த.வெ.க. ஆட்சியில் ரூ.148.91 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்பு

கோவில்களுக்குச் சொந்தமான 34.82 ஏக்கர் நிலங்களுக்கு 15 கோ வில்களின் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

கோவில்களுக்குச் சொந்தமான சொத்துகளைப் பாதுகாத்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவில் வசம் சுவாதீனம் பெறுதல் ஆகிய நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறை

இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதலமைச்சர் விஜய் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் முயற்சியால், இவ்வரசு பொறுப்பேற்ற 6 மாதங்களில் ரூ.148.91 கோடி மதிப்பிலான 163.40 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 17,707.10 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, மேற்படி புலங்களில் 13,233 எல்லைக் கற்கள் நடப்பட்டு உள்ளன. கோவில்களுக்குச் சொந்தமான அசையாச் சொத்துகளில் இருந்து வரப்பெற வேண்டிய குத்தகை-வாடகை நிலுவைத் தொகை ரூ.213 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளது.

பட்டா

கோவில்களுக்குச் சொந்தமான 34.82 ஏக்கர் நிலங்களுக்கு 15 கோ வில்களின் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. கணினிச் சிட்டாவில் தவறுகள் திருத்தம் செய்ய வருவாய் துறை கோட்டாட்சியரிடம் முறையீடுகள் செய்யப்பட்டு 262 ஏக்கர் நிலங்கள் 226 கோவில்களின் பெயரில் பட்டா பெறப்பட்டுள்ளன.

கோவில்களுக்குச் சொந்தமான கடைகள் மற்றும் கட்டடங்களில் வாடகைக்கு இருப்போருக்கு, வாடகை மற்றும் நிலுவைத் தொகை குறித்த கோரிக்கை அறிவிப்புகள் உரிய கால இடைவெளியில் தவறாமல் வழங்கப்பட்டு வருகின்றன. வாடகைதாரர்கள் நிலுவைத் தொகையைச் செலுத்தியவுடன் உடனடியாக ரசீது வழங்குவதுடன், ஏற்கெனவே செலுத்தப்பட்ட தொகைகளைக் கணக்கில் கொண்டு, மீதமுள்ள நிலுவைத் தொகை குறித்த விவரங்கள் துல்லியமாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

குறுஞ்செய்தி

வாடகைதாரர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வாடகை மற்றும் நிலுவைத் தொகை குறித்த விவரங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வகையில், குறிப்பிட்ட கால இடைவெளியில் கைப்பேசி குறுஞ்செய்திகள் வாயிலாகத் தகவல்கள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

கோவில்களுக்குச் சொந்தமான சொத்துகளைப் பாதுகாத்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவில் வசம் சுவாதீனம் பெறுதல் ஆகிய நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT