யானைகள் 
தமிழக செய்திகள்

தேயிலை தோட்டத்தில் படுத்து உறங்கிய குட்டி யானைகளுக்கு அரணாக நின்ற சக காட்டு யானைகள்

சுற்றுலா பயணிகள் காட்டு யானைகள் படுத்து உறங்குவதை பார்த்து நெகிழ்ச்சி அடைந்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் எஸ்டேட் பகுதிகளையொட்டி அடர் வனப்பகுதிகள் உள்ளது. இதனால் வனவிலங்குகள் அவ்வவப்போது வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைவது வழக்கம்.

காட்டு யானைகள்

அதிலும் குறிப்பாக காட்டு யானைகள் அதிகளவில் வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்புக்குள் நுழைவது வாடிக்கையாக உள்ளது. அவ்வாறு வரும் யானைகள் வீடுகள், பொருட்களை சேதப்படுத்தியும் செல்கிறது.

வழக்கமாக வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் செப்டம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை வால்பாறை சுற்று வட்டார வனப்பகுதிகளில் காட்டு யானைகள் சுற்றி வருவது வழக்கம்.

படுத்து உறங்கிய குட்டி யானைகள்

ஆனால் நடப்பாண்டு முன்னதாகவே வால்பாறைக்கு யானைகள் கூட்டம், கூட்டமாக வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக கேரள மாநிலம் அதரப்பள்ளி வனப்பகுதி மற்றும் மூணார் வனப்பகுதிகளில் இருந்து யானைகள் வால்பாறை வனப்பகுதிக்கு வரத்தொடங்கி விட்டன.

இந்த நிலையில், வால்பாறை அருகே பன்னிமேடு எஸ்டேட்டுக்கு, சம்பவத்தன்று 5 காட்டு யானைகள் இரவில் நுழைந்தன. பின்னர் அந்த யானைகள் அங்குள்ள தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்தது.

சுற்றுலா பயணிகள் வியப்பு

அப்போது யானை கூட்டத்தில் இருந்த 2 குட்டி யானைகள் படுத்து உறங்கின. அந்த சமயம் அங்கு நின்றிருந்த மற்ற 3 காட்டு யானைகளும், குட்டி யானைகளுக்கு யாரும் எந்தவித தொந்தரவும் கொடுத்து விடாதபடி, பாதுகாப்பாக நின்றிருந்தன.

இதனை பார்த்த சுற்றுலா பயணிகள் காட்டு யானைகள் படுத்து உறங்குவதை பார்த்து நெகிழ்ச்சி அடைந்தனர்.

காட்டு யானைகள் அருகில் யாரும் செல்ல வேண்டாம் என்றும், யானைகளுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம் என்றும் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.