தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தை அடுத்த சாயமலையை சேர்ந்தவர் அழகுராஜ்.
இவர் வாரிசு சான்றிதழ் கேட்டு திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். அப்போது அங்கிருந்த தாசில்தார் மைதீன் பட்டாணி சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.4,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அழகுராஜ் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகனிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அழகுராஜிடம் கொடுத்து அனுப்பி உள்ளனா்.
நேற்று மதியம் அழகுராஜ் அந்த பணத்தை தாசில்தாரிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், மைதீன் பட்டாணியை கையும் களவுமாக பிடித்தனர்.
அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார், வேறு ஏதேனும் ஆவணங்கள் சிக்குகிறதா என்று சோதனை செய்தனர். தொடர்ந்து தாசில்தார் மைதீன் பட்டாணியிடம் துருவி,துருவி விசாரணை நடத்தினர்.
சுமார் 15 மணி நேரம் நடைபெற்ற விசாரணை இன்று அதிகாலையில் முடிவடைந்தது. அதில் மைதீன் பட்டாணி லஞ்சம் பெற்றது உறுதியானது. இதையடுத்து அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.