தமிழக செய்திகள்

தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் ஒத்திவைப்பா? 2027 ஜனவரியில் கூட வாய்ப்பு!

தற்போதைய அரசியல் சூழலில், பல்வேறு பிரச்சினைகள் ஆளும் கட்சிக்கு எதிராக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும், அடுத்த ஆண்டு 2027 தொடக்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டு வருவதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி, இரண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடர்களுக்கு இடையே 6 மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது. தமிழக சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி நிறைவடைந்தது. அதிலிருந்து தற்போது இரண்டு மாதங்களே கடந்துள்ளதால், குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கு அவகாசம் உள்ளது. வழக்கமாக நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் சில நாட்கள் குளிர்கால கூட்டத்தொடர் கூட்டப்பட்டு, அரசின் கூடுதல் செலவினங்களுக்கான துணை மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை அந்த நடைமுறை மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.

தி.மு.க ஆட்சியில் கூட்டத்தொடர்

கடந்த தி.மு.க ஆட்சியில், சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு பிப்ரவரி மாதம் சட்டப்பேரவை கூட்டப்பட்டது. அப்போதைய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பிப்ரவரி 17-ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. புதிய ஆட்சியின் கீழ் கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டமன்றம் கூடியது. இதில் நிதியமைச்சர் மரிய வில்சன் ஆகஸ்ட் 5-ம் தேதி திருத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து ஒவ்வொரு துறைக்குமான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று, சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் பதிலுரைக்கு பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அரசுக்கு நெருக்கடி

தற்போதைய அரசியல் சூழலில், பல்வேறு பிரச்சினைகள் ஆளும் கட்சிக்கு எதிராக முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள், பல்வேறு பகுதிகளில் ஏற்படும் மின் தடை, அரசு நூலகங்களில் போலி புத்தகங்கள் இடம்பெற்றதாக எழுந்துள்ள புகார், த.வெ.க நிர்வாகிகள் மற்றும் சில எம்.எல்.ஏக்கள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் வலுவாக எழுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரங்கள் சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டால், அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என்பதால், குளிர்கால கூட்டத்தொடரை தவிர்த்து, நேரடியாக ஜனவரி மாதத்தில் ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடரை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த கூட்டத்தொடர் எப்போது?

இதன்படி, 2027-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

SCROLL FOR NEXT