தமிழக செய்திகள்

டாஸ்மாக் வருவாயை அதிகரிக்க உலகளாவிய மதுபான பிராண்டுகள்: மாநில அரசு பரிசீலனை?

717 டாஸ்மாக் நிலையங்கள் மூடப்பட்டதன் மூலம் தமிழ்நாடு அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு டாஸ்மாக் வருவாய் சீரமைப்பு:

தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகத்தால் (டாஸ்மாக்) இயக்கப்படும் விற்பனை நிலையங்களில் வருவாய் இழப்புகளை தடுத்தல் விதிமுறைகளில் ஒரு விரிவான சீரமைப்பு பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்ட அரசாணையில் 717 டாஸ்மாக் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டதாக அறிவித்தது. இந்த நடவடிக்கையின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அரசுக்கு சொந்தமான சில்லறை விற்பனை நிலையங்கள் கிட்டத்தட்ட 15 சதவீதம் வரையில் பாதிக்கப்பட்டது.

தற்போது மதுபான பிரியர்கள் உயர்தர பீர் மற்றும் விஸ்கி வகைகளை வாங்குவதற்காக பெங்களூரு மற்றும் புதுச்சேரி போன்ற இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

டாஸ்மாக் நிலையங்களில் வெளிநாட்டு மதுபான பிராண்டுகள் விற்பனை:

இதனை தடுத்து மாநில அரசின் வருவாயை பெருக்கவதற்காக டாஸ்மாக் நிலையங்களில் உலகளாவிய மதுபான பிராண்டுகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட உயர்தர மதுபான பிராண்டுகள், அவற்றின் மேம்பட்ட குளிர்பதன சேமிப்பு உள்கட்டமைப்பு காரணமாக, முதலில் சில உயர்தர வசதிகள் கொண்ட டாஸ்மாக் கடைகளில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கலால் துறையில் ஏற்படும் நிதி இழப்புகளை சரிசெய்து, இந்த நிதியாண்டில் மாநில வருவாயில் கூடுதலாக ரூ.2,700 கோடி ஈட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1981-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுபான விதிகளின் கீழ் உள்ள விதிமுறைகளை, தனியாருக்கு சொந்தமான கிளப்புகள்(FL22) மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள்(FL3) கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

நகர்ப்புறங்களில் அனைத்து தரப்பிலும் இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கு நல்ல வரவேற்பும் தேவையும் இருப்பதால், அரசு நிச்சயமாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.