தமிழக செய்திகள்

தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் விவகாரம்: மேலும் ஒருவர் கைது

இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினரை விலைபேசி, ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஐபிடிஎஸ் அமைப்பின் திருநாவுக்கரசுவின் கார் ஓட்டுநர் கிருஷ்ணாவை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த பரபரப்பான வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

வழக்கின் பின்னணி..

தவெக கட்சியின் உத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என். இளையராஜாவைத் தொடர்புகொண்ட ஐபிடிஎஸ் தேர்தல் வியூக அமைப்பைச் சேர்ந்த திருநாவுக்கரசு, தமிழக சட்டப்பேரவை சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது குறிப்பிட்டபடி வாக்களிக்க ரூ. 35 கோடி லஞ்சம் தருவதாக பேரம் பேசியுள்ளார்.

இந்த பேரத்திற்கு இளையராஜா மறுப்பு தெரிவிக்கவே, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

முந்தைய கைது நடவடிக்கைகள்..

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீசார், முதற்கட்டமாக கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதன்மை குற்றவாளியான ஐபிடிஎஸ் திருநாவுக்கரசு, திருச்சி நரேஷ் மற்றும் மேடவாக்கம் தியாகராஜன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இந்த சதியில் தொடர்புடைய மேலும் 5 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

தற்போதைய அதிரடி கைது..

ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த குதிரை பேர வழக்கில் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் மற்றும் பணப் பரிமாற்றங்களை நகர்த்துவதற்கு உதவியதாக, ஐபிடிஎஸ் திருநாவுக்கரசுவின் கார் ஓட்டுநரான கிருஷ்ணா என்பவரை இன்று திருவல்லிக்கேணி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இதன் மூலம் இந்த மாபெரும் அரசியல் குதிரை பேர சதி வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. சதி திட்டத்தின் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் குறித்தும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் ஆதாரங்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.