தமிழக செய்திகள்

‘ஆளுநர்களின் அரசியல் நோக்கங்களை முறியடித்த வரலாறு கொண்டதுதான் தமிழ்நாடு’ - சு.வெங்கடேசன்

மதுரை வைகை ஆற்றை மீட்க இளைஞர்கள் முன்வர வேண்டும். இல்லையெனில் ஆளுநர் மாளிகை முயற்சி எடுக்கும்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர், மதுரை வைகை ஆற்றை மீட்க இளைஞர்கள் முன்வர வேண்டும். இல்லையெனில் ஆளுநர் மாளிகை முயற்சி எடுக்கும் என தெரிவித்தார்.

அர்லேகரின் இந்தப் பேச்சுத் தொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் சமூக வலைதளப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

“தமிழ்நாடு ஆளுநர் வைகை ஆற்றைக் கடக்கும்போது, ஆற்றில் நீர் இல்லாததைக் கண்டு வேதனையுற்று, "உடனடியாகச் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளாவிட்டால், ஆளுநர் மாளிகையே நேரடியாக களத்தில் இறங்கும்” என்று கூறியுள்ளார்.

ஆளுநர் அவர்களே, கடந்த வாரம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையாற்றச் சென்றபோது, கூவம் ஆற்றைக் கடந்துதானே சென்றீர்கள்? அங்கே ஆற்று நீர் தெள்ளத்தெளிவாகவா ஓடிக்கொண்டிருந்தது? அங்கு ஆளுநர் மாளிகை களத்தில் இறங்க வேண்டிய தேவை ஏதும் ஏற்படவில்லையா?

ஆளுநர் மாளிகை நேரடியாகத் தலையிடும் என்று நீங்கள் கூறுவதன் நோக்கம் பிரச்சனையை தீர்ப்பதற்கல்ல, மாறாக ஓர் இணையாட்சி நிர்வாகத்தை உருவாக்கவே. ஆளுநர்களின் அரசியல் நோக்கங்களை முறியடித்த வரலாறு கொண்டதுதான் தமிழ்நாடு.

சந்தேகம் ஏதும் இருந்தால் ஆர்.என். இரவியிடம் கேட்டுப்பாருங்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.