தமிழ்நாடு 
தமிழக செய்திகள்

இந்தியாவின் வறட்சி மிக்க பகுதியாக உருவெடுக்கும் தமிழ்நாடு.. அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை

20 சதவீதத்திற்கும் அதிகமான வறட்சி பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு இந்தியாவின் முக்கிய வறட்சிப் பகுதிகளில் ஒன்றாக மாறும் அபாயம் உள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.

சமீபத்தில் 'இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் கிளைமட்டாலஜி' இதழில், ‘திருத்தப்பட்ட இந்திய பருவநிலை தீவிரக் குறியீட்டைப் (CEI) பயன்படுத்தி இந்தியத் துணைக்கண்டத்தில் காலநிலை தீவிரங்களின் பரிணாமம்’ என்ற ஆய்வு வெளியிடப்பட்டது.

நாட்டின் நான்கு முக்கிய காலநிலை மண்டலங்களில் ஒன்றான தென் தீபகற்ப இந்தியாவில், நீண்டகால வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் பரப்பளவு மிக வலுவாக அதிகரித்துள்ளது என்றும் அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

ஆய்வு

1971 முதல் 2022 வரையிலான மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலைத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வை, தேசிய மத்திய கால வானிலை முன்னறிவிப்பு மையம், இந்திய வானிலை ஆய்வு துறை மற்றும் அத்ரியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.

இதன்படி தெற்கு தீபகற்பத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதி 2000 ஆம் ஆண்டிலிருந்து கணிசமாக அதிகரித்துள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளில், அப்பகுதியின் 40 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்டது என்றும் அந்த ஆய்வு தெரிவித்தது.

2011 முதல் 2021 வரை, தெற்கு, மத்திய மற்றும் வடகிழக்கு இந்தியாவின் பெரும் பகுதிகளில் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் 20 சதவீதத்திற்கும் அதிகமான வறட்சி பதிவாகியுள்ளது.

“நாட்டில் வறட்சியின் மிகவும் தீவிரமான அறிகுறி தென்னிந்தியாவில் காணப்படுகிறது. தமிழ்நாட்டை உள்ளடக்கிய கிழக்குக் கடலோரப் பகுதி, நாட்டின் மிகக் கடுமையான வறட்சிப் பகுதிகளில் ஒன்றாகும்,” என்று இந்த ஆய்வின் இணை ஆசிரியரும், புவி அறிவியல் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளருமான எம். ராஜீவன் கூறினார்.

"கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட பெரும்பாலான இயற்கை பேரழிவுகளை விட தென்னிந்தியாவில் ஏற்பட்ட வறட்சி மிகவும் கடுமையானதாக இருந்துள்ளது" என்று முன்னணி ஆய்வாளரும் காலநிலை விஞ்ஞானியுமான தோட்டா மோகன் கூறினார்.

பொய்த்த பருவமழை

வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போகும்போது, ​​தமிழ்நாட்டில் வறட்சி எவ்வளவு கடுமையாக இருக்கும் என்பதை மாநிலத்தின் பருவமழை வரலாறு காட்டுகிறது.

2016ஆம் ஆண்டில், வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதன் காரணமாக, தமிழ்நாட்டில் இயல்பை விட 62 சதவீதம் குறைவான மழைப்பொழிவு பதிவானது.

இதைத் தொடர்ந்து, 16,682 கிராமங்களில் 13,305 கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டன. மாநிலத்தின் 32 மாவட்டங்களையும் வறட்சியால் பாதிக்கப்பட்டவையாக அரசு அறிவித்திருந்தது.

எல் நினோ

எல் நினோ நிகழ்வு குறித்த தமிழக அரசின் சமீபத்திய மதிப்பீடும், வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து குறைதல் ஆகியவற்றை முக்கிய அபாயங்களாக சுட்டிக்காட்டுகிறது.

தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வறட்சி அச்சுறுத்தல்கள் 2027 ஆம் ஆண்டு வரை தொடர வாய்ப்புள்ளது என மாநிலத்தின் எல் நினோ ஆலோசனைக் குழு எச்சரித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, குறைந்த நீரைப் பயன்படுத்தும், குறுகிய காலத்தில் அறுவடை செய்யக்கூடிய, வெப்பம் மற்றும் வறட்சியைத் தாங்கக்கூடிய பயிர் வகைகளை ஊக்குவிக்கவும், அதிக நீரைப் பயன்படுத்தும் பயிர்களுக்குப் பதிலாக மற்ற பயிர்களைப் பயிரிட ஊக்கத்தொகை வழங்கவும் குழு பரிந்துரைத்தது.

SCROLL FOR NEXT