'சூப்பர் எல் நினோ' பேரழிவு: அடுத்த 6 மாதங்களில் 4.5 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்- புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

பிப்ரவரி 2027 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் மட்டும் சுமார் 15,800 கூடுதல் வெப்ப உயிரிழப்புகள் பதிவாகலாம்.
Super El Nino
Published on
Summary

ஆய்வு முடிவுகளின்படி, உயிரிழப்புகள் பெரும்பாலும் ஆப்பிரிக்கா, தெற்காசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளை உள்ளடக்கிய 'க்ளோபல் சவுத்' பகுதியிலேயே மிக அதிகமாக பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் எல் நினோ பருவநிலை மாற்றத்தின் காரணமாக, வரும் செப்டம்பர் 2026 முதல் பிப்ரவரி 2027 வரையிலான இடைப்பட்ட 6 மாத காலத்தில் உலகளவில் 4,50,000க்கும் அதிகமானோர் வெப்பத்தின் தாக்கம் தாங்காமல் உயிரிழக்கக்கூடும் என்று க்ளைமேட் இம்பாக்ட் லேப் நடத்திய புதிய ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் இந்த தீவிர வெப்ப மாறுபாடு, புவி வெப்பமயமாதலுடன் இணைந்து 'சூப்பர் எல் நினோவாக' உருவெடுத்துள்ளதே இந்த பெரும் அசாதாரண சூழ்நிலைக்கு முதன்மை காரணமாகும்.

தெற்கு அரைக்கோள நாடுகளுக்கே அதிக பாதிப்பு

இந்த ஆய்வு முடிவுகளின்படி, உயிரிழப்புகள் பெரும்பாலும் ஆப்பிரிக்கா, தெற்காசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளை உள்ளடக்கிய 'க்ளோபல் சவுத்' பகுதியிலேயே மிக அதிகமாக பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவின் சாஹெல் பிராந்தியத்தில் மட்டும் சுமார் 66,800 கூடுதலான உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக நைஜீரியா (31,320), இந்தோனேசியா (19,251) மற்றும் சூடான் (17,430) ஆகிய நாடுகள் அதிகளவில் பாதிப்பை சந்திக்கக் கூடிய நாடுகளின் பட்டியலில் முன்னணியில் உள்ளன.

இந்தியாவில் கொளுத்தும் வெப்பம்

எல் நினோவின் தீவிரப் போக்கினால் இந்தியாவிலும் இயல்பை விட வெப்பநிலையின் தாக்கம் கடுமையாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 2027 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் மட்டும் சுமார் 15,800 கூடுதல் வெப்ப உயிரிழப்புகள் பதிவாகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக இந்தியாவில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் நிலவும் குளிர் காலத்திலும் கூட, இம்முறை வழக்கத்திற்கு மாறான அதிக வெப்பநிலை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பமயமாதலுக்கான எச்சரிக்கை மணி

அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய ஆய்வுக்குழு, தற்போது நிலவும் இந்த வெப்பநிலை அதிகரிப்பானது எதிர்கால புவி வெப்பமயமாதலின் ஒரு முன்மாதிரியாக உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளனர். வெப்ப அலைகள் மட்டுமின்றி, வறட்சி, காட்டுத்தீ, வெள்ளப்பெருக்கு மற்றும் விவசாய உற்பத்தி குறைவு போன்ற பிற தீவிர பாதிப்புகளும் தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால், உலக நாடுகள் உடனடியாகக் கூலிங் மையங்கள் அமைத்தல், முன்னெச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் வெளிப்புற தொழிலாளர்களின் வேலை நேரத்தை முறைப்படுத்துதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com