தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் ராஜினாமா
தமிழக செய்திகள்

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் மணிவண்ணன் ராஜினாமா

தி.மு.க. ஆட்சியில் கடந்த 2025 ஜனவரி மாதம்தான் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

தமிழ்நாட்டில் பல இடங்களில் தற்போது மின்சாரம் தடைப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள இடங்களில் மின் தடையை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். மின்சாரம் தடைப்படுவதை சரி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

ராஜினாமா

இந்நிலையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஆர். மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே இந்த ஆணையத்தின் மற்ற 2 உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற நிலையில் தற்போது ஆணைய தலைவர் ஆர்.மணிவண்ணனும் பதவி விலகி உள்ளார். இதனால் ஒட்டுமொத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையமும் காலியாக உள்ளது.

தற்போது பதவியை ராஜினாமா செய்துள்ள மணிவண்ணன் மின்சாரத் துறையில் நீண்டகால பணி அனுபவம் கொண்டவர். இவர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பகிர்மான இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன்பிறகு தி.மு.க. ஆட்சியில் கடந்த 2025 ஜனவரி மாதம்தான் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

இவர் இந்த பொறுப்பில் 3 ஆண்டு வரை நீடிக்கலாம். ஆனால் ஆட்சி மாற்றம் காரணமாக ஒன்றரை ஆண்டுகளிலேயே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தமிழக மின்சாரத்துறையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மிகவும் முக்கிய மானதாகும்.

ஒழுங்குமுறை ஆணையம்

நீதிமன்ற அதிகாரம் கொண்ட இந்த ஆணையத்தில் ஒரு தலைவர், 2 உறுப்பினர்கள் இருப்பார்கள். இந்த ஆணையம்தான் மின் பகிர்மான நிறுவனங்களுக்கும், வணிக நுகர்வோருக்கும் இடையிலான மின்சாரம் தொடர்பான சர்ச்சைகளை தீர்ப்பது, பல்வேறு மின் திட்டங்கள், செலவினங்கள் மற்றும் மின் கொள்முதல் ஆகியவற்றை அனுமதித்து ஒப்புதல் அளிக்கும் பணிகளையும் மேற்கொள்கிறது.

மேலும் மின் கட்டணங்களை நிர்ணயிப்பதும், முக்கியப் பிரச்சினைகளில் முடிவெடுக்கக் கூட்டங்களை நடத்துவது உள்ளிட்ட பணிகளை இந்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்தான் செய்யும். தற்போது அந்த ஆணையத்தை சேர்ந்த தலைவர்- 2 உறுப்பினர்களும் விலகியுள்ள நிலையில் பணிகள் பாதிக்கும் என்பதால் புதிய தலைவர் உறுப்பினர்களை அரசு விரைவில் நியமிக்கும் என தெரிகிறது.

த.வெ.க. ஆட்சி

தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைந்ததற்கு பிறகு தி.மு.க. ஆட்சியில் நியமனத்தில் இருந்த அதிகாரிகள் அடுத்தடுத்து விலகி வரும் நிலையில், தற்போது தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் ஆர். மணிவண்ணனும் ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக தமிழ்நாடு தீயணைப்பு துறை ஆணையத்தின் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற டி.ஜி.பி. சங்கர் ஜிவால், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராக இருந்த ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சுனில் குமார் ஆகியோர் தங்களின் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.