தமிழக செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர், ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

முதலமைச்சர் விஜய் வருகையால் சாலையோரம் ஆயிரக்கணக்கானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கவும், புதிய உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் சிப்காட் தொழில் வளாகங்களில் நேரடி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

செயிண்ட் கோபைன் கண்ணாடி ஆலையில் ஆய்வு:

ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டை மற்றும் மாம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரான்ஸ் நாட்டின் பன்னாட்டு நிறுவனமான 'செயிண்ட் கோபைன்' உலகத்தரம் வாய்ந்த கண்ணாடி தயாரிப்பு வளாகத்தில் தனது முதல் ஆய்வை முதலமைச்சர் மேற்கொண்டார்.

தமிழக அரசுடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி இந்த ஆலை மிகப்பிரம்மாண்டமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அங்கு தயாரிக்கப்படும் அதிநவீன கண்ணாடி உற்பத்திப் பிரிவுகளை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.

முதலமைச்சரின் வருகையை ஒட்டி, அப்பகுதியின் இருபுறமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் பொதுமக்களும் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ரெனால்ட்-நிசான் நிறுவனத்திலும் ஆய்வு:

கண்ணாடி ஆலை நிறுவன ஆய்வை முடித்து விட்டு, அதனைத் தொடர்ந்து ஒரகடம் பகுதியிலேயே அமைந்துள்ள பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட்-நிசான் தொழிற்சாலைக்கும் முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டார்.

முதலமைச்சர் விஜய்க்கு அங்கிருந்த அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அடுத்த இலக்கு: ஒரகடம் 'டெய்ம்லர் இந்தியா' ஆலை:

முதலமைச்சர் விஜய் அடுத்ததாக ஒரகடம் சிப்காட் தொழில் வளர்ச்சி மையத்தில் அமைந்துள்ள 'டெய்ம்லர் பஸஸ் இந்தியா' மற்றும் 'டெய்ம்லர் இந்தியா வர்த்தக வாகனங்கள்' உற்பத்தித் தொழிற்சாலைக்கு ஆய்வுக்காக விரைந்துள்ளார்.

சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலை இந்தியாவின் மிகப்பிரம்மாண்டமான வணிக வாகன உற்பத்தி மையங்களில் ஒன்றாகும்.

உலகப் புகழ்பெற்ற 'பாரத்பென்ஸ்' மற்றும் 'மெர்சிடிஸ்-பென்ஸ்' முத்திரையிடப்பட்ட நவீன பஸ்கள், கனரக லாரிகள் மற்றும் பஸ் சேஸ்கள் இங்கு சர்வதேச தரத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு செயல்பட்டு வரும் இந்த ஆலையின் உற்பத்தித் திறன், எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் தொழிலாளர் நலன்கள் குறித்து முதலமைச்சர் விஜய் அடுத்ததாகநேரில் ஆய்வு செய்ய உள்ளார்.

பயணத்தின் முக்கிய நோக்கம்:

தமிழகத்தை இந்தியாவின் முதன்மை முதலீட்டு மையமாக மாற்றுவதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாகும்.

பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தித் திறனை நேரில் மதிப்பீடு செய்வதன் மூலமும், தொழில்துறை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலமும் மாநிலத்தில் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.