செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ எம்.எல்.ஏ மாரிமுத்து, டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் த.வெ.க கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதி சார்ந்த கோரிக்கைகளை முதலமைச்சரிடம் மனுக்களாக அளித்தனர். கூட்டத்திற்குப் பிறகு சிபிஐ எம்.எல்.ஏ.க்கள் தளி ராமச்சந்திரன் மற்றும் மாரிமுத்து ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து கூட்டத்தில் நடந்தது குறித்து விளக்கம் அளித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ எம்.எல்.ஏ தளி ராமச்சந்திரன், இதுபோன்ற சந்திப்பு இனி 3 மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் என்று தெரிவித்தார். தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் மனுக்களாக கொடுத்ததாகவும், தொகுதி சார்ந்த பிரச்சனைகளை மட்டுமே முதலமைச்சரிடம் எடுத்துரைத்ததாகவும் அவர் கூறினார். குறிப்பாக பயிர்ச்சேதம் உள்ளிட்டவற்றை கணக்கிட ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிவித்தார். மேலும் எஞ்சிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக கூறினார். தாங்கள் தெரிவித்த கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ எம்.எல்.ஏ மாரிமுத்து, டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார். சாலை பாதிப்பு, குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கோரிக்கை மனுவை முதலமைச்சரிடம் வழங்கியதாக கூறினார். 3 மாதத்திற்கு ஒருமுறை இதுபோல் சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும் அவர் தெரிவித்தார். தீபாவளி பரிசு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தீபாவளி பரிசு எங்களுக்கு வழங்கவும் இல்லை, நாங்கள் கேட்கவும் இல்லை என்று தெளிவுபடுத்தினார். டெல்டா மாவட்டங்களுக்கு வருமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் கூறினார்.
மேகதாது அணை கட்ட ஒருபோதும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்று தெரிவித்த மாரிமுத்து, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதச்சார்பின்மை கொள்கையை உறுதியாக கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறினார். அதற்கு மதச்சார்பின்மை வழியில் தான் இந்த அரசு நடக்கும் என்ற உறுதியை முதலமைச்சர் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.