தமிழக செய்திகள்

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது.

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீதான லுக்அவுட் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

2022-ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேடு தொடர்பாக ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்பட 11 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

எ.வ.வேலுவை நேரில் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையே அவருக்கு எதிராக காவல்துறை பிறப்பித்த லுக்-அவுட் நோட்டீசை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் லுக் அவுட் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் அவர் ஜூலை 15-ந்தேதி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது, முறையாக ஆய்வு செய்யப்படாமல் லுக்-அவுட் நோட்டீசை சென்னை ஐகோர்ட் ரத்து செய்ததாக தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

சிங்கப்பூர் சென்றிருந்த எ.வ.வேலு தமிழ்நாட்டிற்கு திரும்பி வந்துவிட்டாரே நீங்கள் அவரை விசாரிக்கலாமே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு வழக்கறிஞர், எ.வ.வேலு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்குமாறு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, இதுதொடர்பாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டு உத்தரவுகளை வாங்கிக் கொள்ளலாம் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.