

முதலமைச்சர் விஜய் தனது தேர்தல் பிரசாரத்தின் போது த.வெ.க. ஆட்சி அமைந்தால் தூய்மையான நிர்வாகத்தை தருவோம். ஒரு பைசாக் கூட லஞ்சம் வாங்க மாட்டோம் என்று தெரிவித்து இருந்தார்.
ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக அதனை செயல்படுத்தவும் அவர் உத்தரவிட்டார். இதன்படி தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஊழலை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கரூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் லஞ்ச ஊழலை குறிப்பிட்டு மீண்டும் அதிரடியாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.
அரசு அலுவலகங்களில் யாரும் லஞ்சம் கொடுக்க வேண்டாம் என்றும், அதையும் மீறி யாராவது லஞ்சம் கேட்டால் இது விஜய் ஆட்சி, லஞ்சம் கொடுக்க மாட்டோம் என்று சொல்லுங்கள் என்றும் அவர் அறிவுறுத்தி இருந்தார்.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை காரணமாக அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவதற்கு அதிகாரிகள் அஞ்சும் நிலை ஏற்பட்டு உள்ளது. பல்வேறு துறைகளிலும் லஞ்சம் வாங்காமல் அனுமதிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக பள்ளி கல்வித்துறையில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரத்துக்கு கடந்த ஆட்சியில் வாங்கப்பட்ட லட்சக்கணக்கான லஞ்சம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு உள்ளது.
இதே போன்று மற்ற துறைகளிலும் லஞ்ச ஊழலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் விஜய் முடுக்கி விட்டுள்ளார்.
இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவதற்கு அதிகாரிகளும், ஊழியர்களும் பயப்படுகிறார்கள். அதே நேரத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களிலும் இடைத்தரகர்கள் போல செயல்படும் பலர் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது என்று கூறிக் கொண்டு சுற்றித் திரிவதையும் பார்க்க முடிகிறது. அதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இது பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில், யாரும் லஞ்சம் கொடுக்க வேண்டாம் என்ற அறிவிப்புப் பலகைகள் முக்கியமாக இடம்பெறுவதை தமிழக அரசு உறுதி செய்யும் வகையில் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
இது தொடர்பாக அனைத்து அரசுத் துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் சாய் குமார் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
இதன்படி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் இணைய தளத்திற்கான இணைப்புடன், வாட்ஸ்அப் எண்ணும் அனைத்து அதிகாரப்பூர்வ வலைத்தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் கேட்டால் 9498180936 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு புகார் அனுப்பலாம் என்று லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு முன்பு, லஞ்ச எதிர்ப்பு அறிவிப்புப் பலகைகளை வைக்குமாறு அந்தந்த துறைகளுக்கு அரசாங்கம் உத்தரவுகளையும் கடிதங்களையும் பிறப்பித்திருந்தன, ஆனால் பல துறைகள் அதற்குக் கீழ்ப்படியவில்லை.
தற்போது அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் கொடுக்காதீர் என்ற அறிவிப்பு பலகையை காண முடிகிறது.
லஞ்ச ஒழிப்புத்துறை இணையதளமான dvac@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 044-22321090, 22321085, 22310989 மற்றும் 22342142 ஆகிய எண்களை அழைத்தோ புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறையில் நேரடியாக சென்று புகார் தெரிவிக்க விரும்புபவர்கள் எண் 293, எம்.கே.என் சாலை, ஆலந்தூர், சென்னை-600016 என்ற முகவரிக்கு நேரில் சென்று வழங்கலாம் அல்லது தபால் மூலமாகவும் அனுப்பலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.