தமிழ்நாட்டில் சர்க்கரை விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து ஒரு கிலோ சர்க்கரை 67 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் சர்க்கரை விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது இது குறித்து சென்னை கோயம்பேட்டை சேர்ந்த மளிகை பொருட்கள் மொத்த வியாபாரி சாமுவேல் ராஜ் கூறியதாவது:-
சர்க்கரை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதற்கு முக்கியக் காரணமாக தமிழ்நாட்டிற்கு சர்க்கரை அனுப்பும் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள சர்க்கரை உற்பத்தி ஆலைகள் சர்க்கரையை பதுக்கி வைப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் முறையற்ற பருவமழை காரணமாக கரும்பு உற்பத்தி பெருமளவு குறைந்து உள்ளது.
இந்தநிலையில், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி விழா மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகள் தொடர்ந்து வர இருப்பதால் இனிப்பு பண்டங்கள் தயாரிக்க சர்க்கரை தேவை அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு சர்க்கரை ஆலைகள் பதுக்கலில் ஈடுபடுகின்றனர்.
மேலும் கச்சா எண்ணெயின் விலை உயர்வால் இ-20 பெட்ரோல் தயாரிப்புக்கு கரும்பில் இருந்து எத்தனால் எடுக்கப்படுவதால் அதிக அளவில் கரும்பு தேவைப்பாடு அதிகரித்து உள்ளது. இதனால் கடந்த மாதம் ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்ட சர்க்கரை விலை படிப்படியாக உயர்ந்து ஒரு கிலோ சர்க்கரை ரூ.67-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுத்து சர்க்கரை பதுக்கலில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் இந்தியாவில் சர்க்கரை இருப்பு குறைவாக இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து சர்க்கரை இறக்குமதியை செய்தால் தான் சர்க்கரை விலை கட்டுப்பாட்டுக்குள் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.