சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை - மத்திய அரசு அறிவிப்பு

உள்நாட்டு தேவையை முன்னுரிமையாகக் கருதி, சர்க்கரை ஏற்றுமதி தடை உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை - மத்திய அரசு அறிவிப்பு
Published on

மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து தப்பிக்க மத்திய அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும், உள்நாட்டில் சர்க்கரை இருப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உள்நாட்டு சர்க்கரை உற்பத்தி கவலை அளிக்கும் வகையில் உள்ளதால் இந்த ஏற்றுமதி தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

செப்டம்பர் 30-ந்தேதி வரை சர்க்கரை ஏற்றுமதிக்கான தடை அமலில் இருக்கும் என்று வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு இந்த சர்க்கரை ஏற்றுமதி தடையில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

பல்வேறு சர்க்கரை வகைகளுக்கான ஏற்று மதி நிலை கட்டுப்படுத்தப்பட்டது என்பதில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது என மாறியுள்ளது. மூல சர்க்கரை, வெள்ளை சர்க்கரை, சுத்தி கரிக்கப்பட்ட சர்க்கரை என ஐ.டி.சி. குறியீட்டின் கீழ் வரும் அனைத்து வகை சர்க்கரைகளுக்கும் இது பொருந்தும். பொதுவான தடை இருந்தாலும் சில குறிப்பிட்ட நாடுகளுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

அதாவது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுக்கு ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட சி.எக்‌ஸ். எல். மற்றும் டி.ஆர்.கியூ. ஒதுக்கீட்டின் கீழ் சர்க்கரை ஏற்றுமதி தொடரும். மற்ற நாடுகளின் உணவு பாதுகாப்பு தேவைகளுக்காக அந்தந்த நாட்டு அரசுகள் முறைப்படி கோரிக்கை வைத்தால் இந்திய அரசு பரிசீலித்து ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கும்.

மேலும் இந்த அறிவிப்பு வருவதற்கு முன்பு கப்பல்களில் ஏற்றப்பட்ட அல்லது துறைமுகங்களுக்கு வந்து சேர்ந்த சரக்குகளுக்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி உண்டு.

இந்த தடை வருகிற செப்டம்பர் 30-க்குப் பிறகு நீட்டிக்கப்படாவிட்டால் தானாகவே கட்டுப்படுத்தப்பட்ட நிலைக்கு திரும்பும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முக்கிய கரும்பு விளையும் பகுதிகளில் விளைச்சல் குறைந்து வருவதால் தொடர்ந்து 2-வது ஆண்டாக உற்பத்தி நுகர்வைவிட பின்தங்கி இருக்கும் என்று கருதப்படுகிறது. எனவே, உள்நாட்டு விலைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பிரேசிலுக்கு அடுத்தபடியாக உலகில் 2-வது பெரிய சர்க்கரை உற்பத்தி நாடாக இந்தியா இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com