சென்னை-சிங்கப்பூர் ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், விமானி உடனடி நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து, விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஸ்கூட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், தினமும் வழக்கமாக இரவு 10.50 மணிக்கு, சிங்கப்பூரில் இருந்து, சென்னைக்கு வந்துவிட்டு, அதன் பின்பு நள்ளிரவு 12 மணிக்கு, சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு செல்லும்.
இதேபோல் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு, சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஸ்கூட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது.
அந்த விமானத்தில் 310 பயணிகள், 12 விமான ஊழியர்கள் உட்பட 322 பேர் பயணம் செய்ய இருந்தனர். அவர்கள் அனைவரும் விமானத்தில் ஏறி அமர்ந்த நிலையில், விமானத்தின் கதவுகள் மூடப்பட்டன.
அதன் பின்பு விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கியபோது, விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதை, விமானி கண்டுபிடித்தார்.
இந்த நிலையில் விமானத்தை வானில் பறக்க செய்வது பெரும் ஆபத்து என்பதை உணர்ந்த விமானி, விமானத்தை ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தினார். அதோடு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு, தகவல் தெரிவித்தார்.
இதை அடுத்து அந்த விமானம் ஓடுபாதையில் இருந்து, இழுவை வண்டி மூலமாக, விமானம் புறப்பட்ட இடத்திற்கு இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அதோடு விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.
விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி, விமானத்தை பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும், கீழே இறக்கப்பட்டு, சென்னை விமான நிலைய ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இன்று அதிகாலை 5 மணி வரையில் விமானத்தை பழுது பார்க்க முடியவில்லை. இதை அடுத்து விமானம் ரத்து என்று பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டது.
விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள் அனைவரும், சொகுசு பேருந்துகளில் ஏற்றப்பட்டு, சென்னை நகரில் உள்ள, பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விமானம் பழுது பார்க்கப்பட்டு, இன்று இரவு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறை, விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து, எடுத்த உடனடி நடவடிக்கை காரணமாக, விமானம் விபத்தில் இருந்து தப்பியதோடு, விமானத்திலிருந்த 310 பயணிகள் உட்பட 322 பேர், நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.