தமிழக செய்திகள்

போச்சம்பள்ளி அருகே பனை மரத்திலிருந்து தவறி விழுந்து மாணவன் உயிரிழப்பு

பள்ளி விடுமுறை என்பதால் நந்தகுமார் பனை மரத்தில் நுங்கு வெட்டுவதற்காக ஏறியுள்ளார்.

பள்ளி விடுமுறை நாளில் நுங்கு வெட்டுவதற்காக பனை மரத்தில் ஏறிய 10-ம் வகுப்பு மாணவன், தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் அருகேயுள்ள பாப்பாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கௌவரன் இவரது மகன் நந்தகுமார் (15). இவர் அரசம்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்தார்.

பள்ளி விடுமுறை என்பதால், மாலை 6:30 மணியளவில் நந்தகுமார் தனது தந்தையின் நிலத்திற்கு அருகில் உள்ள அப்பாஸ் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் இருந்த பனை மரத்தில் நுங்கு வெட்டுவதற்காக ஏறியுள்ளார். மரத்தின் உச்சாணிக் கிளையில் நுங்கு வெட்டிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக நந்தகுமார் பிடி நழுவி கீழே விழுந்தார். இதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தந்தை கௌவரன் மற்றும் கல்லூரியில் பயிலும் அவரது சகோதரிகள் ஹரிணி, கோமதி ஆகியோர் உடனடியாக நந்தகுமாரை மீட்டு தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு மாணவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து பாரூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.